சிங்கப்பூர் ஆயுதப்படையின் “eMart” கடைக்குப் பொருள்கள் விநியோகம் செய்யும் தொழிலில் முதலீடு செய்வதாக ஓர் ஆடவரை நம்பவைத்து $145,000 அபகரித்துவிட்டார் ஒரு மாது.
இந்த மோசடிக்காக 67 வயது ஜஹபர் நாச்சியா முகமது அப்துல்லாவுக்குப் புதன்கிழமை 28 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர், 2015 மார்ச் 30ஆம் தேதிக்கும் செப்டம்பர் 3ஆம் தேதிக்கும் இடையில் 10 சம்பவங்களில் திரு கஸ்மூரி ஹம்பாலி என்பவரை ஏமாற்றினார். இதுவரை அவர் $7,200 திருப்பிக் கொடுத்திருக்கிறார். அதனால் மொத்த இழப்பு $138,300.
திரு கஸ்மூரி தான் வேலை செய்த பள்ளியின் தேசிய மாணவர் படைக்குப் பொறுப்பு வகிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது, 2000ஆம் ஆண்டு ஜஹபர் அவருக்கு அறிமுகமானார்.
ஆங்கில மொழி ஆசிரியரான திரு கஸ்மூரி, தனது மாணவர்களுக்காக பீச் சாலையிலிருந்த ஜஹபரின் கடையில் பொருள்கள் வாங்கினார்.
2015ல், தொழில் செய்வதில் விருப்பமுண்டா என்று திரு கஸ்மூரியிடம் ஜஹபர் கேட்டார். சிங்கப்பூர் ஆயுதப்படையின் “eMart” கடைக்கு “நெடுங்காலமாகப்” பொருள்கள் விநியோகம் செய்வதாகவும், மூலதனத்தை அதிகரித்து அதிகமான பொருள்கள் விநியோகம் செய்ய விரும்புவதாகவும் ஜஹபர் அவரிடம் கூறியதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால், ஜஹபர் “eMart” இணையத்தளத்தின் அதிகாரபூர்வ விநியோகிப்பாளர் அல்ல. திரு கஸ்மூரி கொடுத்த பணத்தை அவர் அந்தத் தொழிலில் முதலீடு செய்யவும் இல்லை.
தேசிய சேவையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையுடன் தனிப்பட்ட சாதனங்கள் வாங்குவதற்கான கடையே “eMart”. இந்தக் கடைக்கு நேரில் சென்று அல்லது இணையம்வழி தேசிய சேவையாளர்கள் பொருள்களை வாங்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
ஜஹபரின் பொய்யை நம்பிய திரு கஸ்மூரி 2015 மார்ச் 30ஆம் தேதி $12,000 காசோலையைக் கொடுத்தார். அதே ஆண்டு ஜூன் மாதக் கடைசிக்குள் $15,000 திருப்பித் தருவதாக ஜஹபர் உறுதி அளித்தார்.
திரு கஸ்மூரி 2015 பிற்பகுதி வரை மேலும் கூடுதலாகப் பணம் கொடுத்துவந்தார். ஜஹபர் அதற்கு உறுதிச்சீட்டுகள் எழுதிக் கொடுத்தார். அதோடு, பின்தேதியிட்ட காசோலைகளையும் கொடுத்தார்.
ஆனால், பணத்தைத் திருப்பித் தருவதை ஜஹபர் தாமதப்படுத்திக்கொண்டே இருந்ததால், நவம்பர் 4ஆம் தேதி திரு கஸ்மூரி காவல்துறையிடம் புகார் செய்தார்.
திரு கஸ்மூரி கொடுத்த பணம், ஜஹபரின் பீச் சாலை கடைகளில் ஒன்றில் வாடிக்கையாளரின் ஆர்டரை நிறைவு செய்வதற்கான கடன் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார். ஜஹபரின் வெளிநாட்டு வாடிக்கையாளர்களில் மூவர் பணம் கொடுக்கத் தவறியதால் திரு கஸ்மூரிக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலவில்லை என்று ஜஹபர் கூறியிருந்தார்.
ஆனால், ஜஹபரின் பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததாகவும், கடன் என்றும் முதலீடு என்றும் மாற்றி மாற்றி பேசியதாகவும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
ஜஹபர் மேல்முறையீடு செய்ய விரும்புவதாக அவரது வழக்கறிஞர் கூறியதைத் தொடர்ந்து, அவருக்கு $30,000 பிணை வழங்கப்பட்டது.

