‘வேலை நியமன உதவித் தொகையைவேலையிழப்பு பலன்களுடன் ஒப்பிட முடியாது’

2 mins read
4a822d55-e51d-4615-ac5d-2a80b6f271ee
மூத்த ஊழியர்களுக்கு வேலை நியமன உதவித் தொகையும் வேலையிழப்பு பலன்களும் ஒன்றாகிவிடாது என்று அமைச்சர் கோ போ கூன் கூறியுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூத்த ஊழியர்கள் மாற்று வேலை தேடும்போது வேலை நியமன உதவித்தொகை கைக்கொடுக்கிறது. இது, சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் சட்டத்தால் கட்டாயமாக்கப்படாத வேலையிழப்பு பலன்களுடன் இதனை ஒப்பிடக் கூடாது என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வேலை நியமன உதவித் தொகை அதிகமாகவும் குறைவாகவும் இல்லாத அளவுக்கு கவனமாக வடிவமைகப்பட்டுள்ளது என்றார் அவர்.

அண்மையில் 63 வயது மேற்பட்ட ஊழியர்கள் எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆட்குறைப்புப் பலன்களுக்கான உரிமையை இழக்கும் ஊழியர்களின் நிலைமை என்ன என்று செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான விக்ரம் நாயர் எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த திரு கோ, பணி ஓய்வு மற்றும் மறு வேலை நியமனச் சட்டத்தின் கீழ் ஊழியர்கள் தற்போதுள்ள ஓய்வு வயதான 63ஐ அடையும்போது அவர்களுடைய நிறுவனங்கள், தற்போது 68ஆக உள்ள மறுவேலை வாய்ப்பு வயதை எட்டும் வரை மறுவேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இல்லையென்றால் தகுதிபெற்ற ஊழியர்களுக்கு வேலை நியமன உதவித் தொகையை நிறுவனம் வழங்க வேண்டும் என்று கூறினார்.

ஆட்குறைப்புக்கான பலன்கள், வேலை செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதச் சம்பளம் வரை தற்போது நடப்பில் உள்ளது. அதே சமயத்தில் வேலை நியமன உதவித் தொகை மூன்றரை மாதச் சம்ளத்துக்கு ஈடாக இருக்கும். இது, குறைந்தபட்சம் 6,250 வெள்ளியாகவும் அதிகபட்சமாக 14,750 வெள்ளியாகவும் இருக்கும்.

“ஒருவர், அதிக செலவில் பணிநீக்கம் செய்யப்படும்போது 63வது வயதில் வேலையிலிருந்து நீக்கப்பட்டால் மலிவாகிவிடுகிறார்,” என்பதைச் சுட்டிக்காட்டிய திரு நாயர், “மூத்த ஊழியர்களுக்கு வேலை கிடைப்பது சிரமம் என்பதால் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசிய டாக்டர் கோ, மற்ற வயதினருடன் ஒப்பிடும்போது, ​​ஓய்வுபெறும் வயதைத் தாண்டிய ஊழியர்கள் ஆட்குறைப்பினால் பாதிக்கப்படுவதில்லை என்பதைக் காட்டும் தரவுகளை வெளியிட்டார்.

2018 முதல் 2022 வரை, 63 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குடியிருப்பாளர்களிடையே சராசரி ஆட்குறைப்பு சம்பவங்கள் 1,000 ஊழியர்களிடம் 3.8ஆக இருந்தது. இது, ஒட்டுமொத்த ஊழியர் அணியின் 6.1யுடன் ஒப்பிட்டால் குறைவு.

இதே காலகட்டத்தில், 63 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் பணிநீக்கம் செய்யப்பட்டது குறைவாகவே இருந்தது. இது, சராசரியாக ஆண்டுக்கு 450 என்ற எண்ணிக்கையில் இருந்தது என்று டாக்டர் கோ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்