தவறான நிதித்திட்ட விற்பனைக்கு எதிராக புகார் செய்வது அவசியம்

தவறான நிதித்திட்ட விற்பனைக்கு எதிராக புகார் செய்வது அவசியம்

2 mins read
47018b91-bf1d-4ca3-a1c7-ed1551aab6a7
வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

நிதித்திட்டங்கள் தங்களிடம் தவறான முறையில் விற்பனை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கும் பயனீட்டாளர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட நிதி அமைப்பிடம் புகாரளிக்கவேண்டும் என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் வியாழக்கிழமை கூறினார்.

“ஒரு நிதித் திட்டத்தை பிரதிநிதி தவறான முறையில் விற்பனை செய்ததாகக் கண்டறியப்படும் விவகாரங்களை நிதி அமைப்புகள் சட்டப்படி தீர விசாரிக்கப்பட வேண்டும்,” என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

நிதி அமைப்பு பரிகாரம் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், நிதி அமைப்பு வழங்கும் தீர்வு பயனீட்டாளருக்குத் திருப்தியாக இல்லாவிட்டால், நிதித் தொழில்துறை சர்ச்சை தீர்வு நிலையத்தை அவர் அணுகலாம்.

அதிக நிதியறிவில்லாத பயனீட்டாளர்களிடம் விரும்பத்தகாத சந்தை உத்திகளைப் பயன்படுத்தி நிதித்திட்டங்கள் விற்கப்படுவது பற்றியும், பயனீட்டாளர்கள் என்ன செய்யமுடியும் என்பது பற்றியும் தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு டெஸ்மண்ட் சூ எழுப்பிய கேள்விக்குத் திரு டான் நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.

நிதி அமைப்புகளும் அவற்றின் பிரதிநிதிகளும் தங்களது சந்தை நடவடிக்கைகளைப் பொறுப்பான முறையில் மேற்கொள்ளவேண்டும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் எதிர்பார்ப்பதாக ஆணையத்தின் மன்ற உறுப்பினருமான திரு டான் கூறினார்.

எடுத்துக்காட்டாக, பிரதிநிதிகள் தாங்கள் யார் என்பதை உத்தேச வாடிக்கையாளர்களிடம் ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லவேண்டும். சாலைக்காட்சிகளில் தங்களது பிரதிநிதிகள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை நிதி அமைப்புகள் கண்காணிக்கவேண்டும்.

சாலைக்காட்சிகளில் வாங்கிய நிதித்திட்டங்களை வாடிக்கையாளர்கள் புரிந்துகொண்டார்களா என்பதை உறுதிப்படுத்த, நிதி அமைப்புகள் பதிலழைப்புகளும் கருத்தாய்வுகளும் செய்யவேண்டும்.

மின்னியல் சந்தை நடவடிக்கைகள் முறையாக நடத்தப்படுவதற்கான பாதுகாப்புகளை மேம்படுத்த, ஆணையம் அண்மையில் பொது கலந்தாலோசனை நடத்தி கருத்துகளைச் சேகரித்தது.

பொது இடங்களில் சந்தை நடவடிக்கைகளை மேற்கொண்டு நிதித்திட்டங்களை விற்கும் பிரதிநிதிகள், தங்களது அடையாளம், தாங்கள் பிரதிநிதிக்கும் நிதி அமைப்பு ஆகிய விவரங்களை வெளியிடுவதைக் கட்டாயமாக்க ஆணையம் பரிந்துரைக்கிறது.

அதோடு, தயாரிப்பை வாங்குவது குறித்து பரிசீலனை செய்ய வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் கால அவகாசம் கொடுக்கவேண்டும். அன்பளிப்புகள் வழங்குவதையும் கட்டுப்படுத்த வேண்டும்.

இணைய விளம்பரங்களில், தவறான கருத்து வெளியிடப்படுவதைத் தவிர்க்க நிதி அமைப்புகள் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைக்கிறது.

பரிவர்த்தனைக்கு முன்னரும் பின்னரும் பாதுகாப்பை மேம்படுத்தும் பரிந்துரைகள் பற்றியும் ஆணையம் பொதுக் கலந்தாலோசனை நடத்தியிருப்பதாகத் திரு டான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்