பெரிய அளவுகளில் மழைநீரைச் சேகரிக்கும் தனியார் நிறுவனங்களுக்கும், கடல்நீரைச் சுத்திகரிக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் 2025 முற்பகுதியிலிருந்து பொதுப் பயனீட்டுக் கழகம் வரி விதிக்கும்.
தங்களது சொந்த பயன்பாட்டுக்காக அல்லது விற்பனைக்காகக் குடிநீர் அல்லாத நீரை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு இது பொருந்தும். மனமகிழ் மன்றங்கள், குழிப்பந்து திடல்கள், தொழிலியல் கட்டடங்கள் போன்றவையே புதிய வரியைப் பெரும்பாலும் செலுத்தும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தண்ணீருக்கான தேவை 2065ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட இருமடங்காகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடுகள் அல்லாத துறையே இதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.
சிங்கப்பூரில் தற்போது ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 440 மில்லியன் கேலன் தண்ணீர் உபயோகிக்கப்படுகிறது. இது சுமார் 800 ஒலிம்பிக் நீச்சல் குளங்களுக்கு நிகரானது.
பொதுப் பயனீட்டுச் சட்டம் 2001ல் செய்யப்பட்ட திருத்தங்களுடன், தண்ணீருக்கான தேவையைப் பொதுப் பயனீட்டுக் கழகத்தால் செயலாற்றலுடன் நிர்வகிக்க முடியும். அதோடு, மக்களின் தேவைகளுக்கும் பொருளியலின் தேவைகளுக்கும் நீண்டகாலத்திற்குப் போதுமான தண்ணீர் விநியோகம் இருப்பதையும் உறுதிப்படுத்தும் என்று டாக்டர் கோ கூறினார்.
தனியார் தண்ணீர் விநியோகிப்பாளர்களின் எண்ணிக்கையும் அளவும் அதிகரித்து வருவதைக் கழகம் கவனித்துள்ளது. இந்நிறுவனங்கள் தடங்கல்களை எதிர்நோக்கினால் அல்லது வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகிப்பதை நிறுத்தினால், குறுகிய காலத்தில் தண்ணீர் உற்பத்தியை அதிகரிப்பதற்குப் போதுமான கொள்ளளவை கழகம் நிலைநாட்டவேண்டும் என்று அவர் விளக்கமளித்தார்.
சிங்கப்பூருக்குத் தேவையான மொத்த தண்ணீரில் சுமார் ஒரு விழுக்காட்டைத் தனியார் தண்ணீர் விநியோகத் துறை தற்போது வழங்குகிறது.
“தனியார் தண்ணீர் விநியோகத்தைக் குறைவாக வைத்திருப்பது முக்கியமானதொரு பாதுகாப்பு…(தனியார் தண்ணீர் விநியோகிப்பாளர்) துறை பன்மடங்கு வளர்ச்சி அடைந்தால், நமது தண்ணீர் விநியோக முறை கூடுதல் இடரை எதிர்நோக்கும்,” என்றும் டாக்டர் கோ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய வரி இரு கட்டங்களாக நடப்புக்கு வரும். தொடக்கத்தில், நடப்பிலுள்ள தண்ணீர் வரி, தண்ணீர் சேமிப்பு வரி ஆகியவற்றில் 50 விழுக்காடு 2025ல் விதிக்கப்படும். முழு வரி 2026 முதல் நடப்புக்கு வரும். வரித் தொகை எவ்வளவு என்பதை டாக்டர் கோ குறிப்பிடவில்லை.
சிங்கப்பூரில் சுமார் 300 தனியார் தண்ணீர் விநியோகிப்பாளர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர், வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டைகள், பள்ளிகள் போன்றவற்றில் சிறிய அளவுகளில் மழைநீர் சேகரிப்பவர்கள். சில தனியார் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகளும் இருப்பதாக டாக்டர் கோ தெரிவித்தார்.
பெரிய அளவில் மழைநீர் சேகரிப்போரின் எண்ணிக்கை 2013 முதல் மும்மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.
தற்போது, தண்ணீர் பயன்படுத்தும் அனைவருக்கும் தண்ணீர் கட்டணம் போக, தண்ணீர் வரியும், தண்ணீர் சேமிப்பு வரியும் விதிக்கப்படுகின்றன. தண்ணீரைச் சேமிக்க ஊக்குவிப்பது இந்த வரியின் நோக்கம்.
வீடுகள் அல்லாத இடங்களுக்கு, ஒரு கனமீட்டர் தண்ணீருக்கு $0.92 தண்ணீர் வரி விதிக்கப்படுகிறது. பெரிய தனியார் தண்ணீர் விநியோகிப்பாளர்களுக்கும் பொதுப் பயனீட்டுக் கழகம் இந்த வரியை அறிமுகப்படுத்துகிறது.
வீடுகளில், சமூக மன்றங்களில் அல்லது பள்ளிகளில் சிறிய அளவில் மழைநீர் சேகரிப்போருக்குக் கட்டணம் விதிக்கப்படாது.
தனியார் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகள் விற்பனை செய்யும் தண்ணீருக்கு சேமிப்பு வரி விதிக்கப்படும். அவை சொந்தமாகப் பயன்படுத்திக்கொள்ளும் தண்ணீருக்கு இந்த வரி விதிக்கப்படாது.
மழைநீர் சேகரிப்பாளர்கள் ஏற்கெனவே மழைநீரைப் பயன்படுத்தி தண்ணீரைச் சேமிக்க உதவுவதால், அவர்கள் தண்ணீர் சேமிப்பு வரி செலுத்த வேண்டியதில்லை.
இதற்கிடையே, தண்ணீரை மறுசுழற்சி செய்யக்கூடிய சாத்தியமுள்ள தொழில்துறைகளில் தண்ணீர் சிக்கனத்திறன் விதிமுறைகளைக் கழகம் அறிமுகப்படுத்தும். தண்ணீரை அதிகமாகப் பயன்படுத்தும் தொழில்துறைகள் இதில் உள்ளடங்கும். புதிய விதிமுறைகள் 2024 முதல் புதிய திட்டப்பணிகளுக்கு நடப்புக்கு வரும்.

