பெரிக்கத்தான் நேஷனல் தனது கூட்டணிக்குள் இரண்டு புதிய கட்சிகளைச் சேர்த்துக்கொண்டுள்ளது. சிறுபான்மையினர் உரிமைகள் செயல் கட்சி, தேசிய இந்திய முஸ்லிம் கூட்டணிக் கட்சி ஆகியன அவை.
கூட்டணியில் அவ்விரு கட்சிகளும் சேர்க்கப்படுவதற்கு பெரிக்கத்தான் நேஷனல் உச்ச மன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் தலைமைச் செயலாளர் ஹம்ஸா ஸைனுதீன் தெரிவித்தார்.
மலேசியாவில் இந்திய சமூகத்தின் குரலாக அக்கட்சிகள் விளங்குகின்றன.
“இந்தியர்களுக்கான ஆகப்பெரிய கட்சியாக மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி திகழலாம். ஆனால், பதிவு செய்யப்பட்ட பல கட்சிகள் உள்ளன.
“பெரிக்கத்தான் நேஷனலின்கீழ் இந்திய சமூகக் குழுவுக்காக குழு ஒன்றை நாங்கள் அமைத்துள்ளோம்.
“அக்குழுவுக்கு நான் தலைமை தாங்குகிறேன். துணைத் தலைவர், செயலாளர், மற்றவர்கள் அனைவரும் இந்தியர்கள். இந்திய சமூகத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து அவர்கள் கலந்தாலோசிப்பர்,” என்று செய்தியாளர்களிடம் திரு ஹம்ஸா கூறினார்.
“அண்மையில் நான் நடத்திய சந்திப்பு ஒன்றில் 30க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். சந்திப்பு குறித்து அறிந்தவுடன் மேலும் பலர் கலந்துகொள்ள விரும்பினர்.
“இன்னும் ஓரிரு நாளில் இன்னொரு சந்திப்பை நடத்த இருக்கிறேன். அச்சந்திப்பில் கலந்துகொள்ள இதுவரை 50க்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசாங்க சார்பற்ற அமைப்புகளிடமிருந்து கருத்துகளைத் திரட்டுவோம்,” என்று திரு ஹம்ஸா கூறினார்.

