தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிஎன்பி அதிகாரி பார்த்திபனுக்கு தேசிய தின விருது

2 mins read
a5fe0071-974d-4aff-a1c5-d73542b481b7
உள்துறை குழு தனிநபர் விருதுபெறும் பார்த்திபன் மதிவாணன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் (சிஎன்பி) துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பார்த்திபன் மதிவாணன் உள்துறை தேசிய தின விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ளார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய தின பற்றுறுதிச் சடங்கில் விருது பெற்ற உள்துறை குழு அதிகாரிகளுள் திரு பார்த்திபனும் ஒருவர்.

அதிகாரிகள் தவிர்த்து, தொண்டூழியர்கள், அமைப்புகள், குழுக்கள் மற்றும் பொதுமக்களும் உள்துறை குழுவின் தேசிய தின விருது பெற்றனர்.

உள்துறை பயிற்சிக்கழக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 180க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாண்டுக்கான தேசிய தின விருது வழங்கப்பட்டது.

திரு பார்த்திபன் தற்போது மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பிடோக் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணிபுரிகிறார்.

விருது அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசிய திரு பார்த்திபன், 35, வேலை தொடர்பாக எட்டு ஆண்டுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் இன்னும் நெஞ்சில் நிழலாடுவதாகக் கூறினார்.

“போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக வீடு ஒன்றைச் சோதிக்கச் சென்றேன். அந்த வீட்டில் பொருள்கள் சிதறிக் கிடந்தன. ஒரு பெண்ணும் அவரது இரு குழந்தைகளும் அங்கே இருந்தனர்.

“நாங்கள் செல்வதற்கு முன்னர் அந்தப் பெண் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்தது.

“போதைப்பொருள் அதனை உட்கொண்டோரை மட்டுமல்லாது அருகில் இருப்போரை, குறிப்பாக குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நேரடியாகத் தெரிந்துகொண்டேன்.

ஒரு கைக்குழந்தை, மூன்று வயது மதிக்கத்தக் மற்றொரு குழந்தை அங்கு இருந்தன. போதைப் புழக்கம் நமது சமூகத்தைப் பாதிக்கக்கூடிய பெரும் பிரச்சினை என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியது,” என்று திரு பார்த்திபன் விவரித்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு அனைத்துலக ஒத்துழைப்பு மற்றும் பங்காளித்துவப் பிரிவில் உள்துறை அமைச்சின் சார்பாக இடம்பெற்று இருந்தார். கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் அவர் அதில் அங்கம் வகித்தார்.

அந்தக் காலகட்டத்தில், போதைப்பொருள் தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணையத்துடன் இணைந்து அவர் பணியாற்றினார். குறிப்பாக, கஞ்சா ஒழிப்பில் அனைத்துலகக் கட்டுப்பாடு தளர்ந்து வருவதாகக் கூறப்பட்டதற்கு எதிராக அவர் பிரசாரம் செய்தார்.

குறிப்புச் சொற்கள்