தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பே யாம் கெங் செய்துகொண்ட பெருங்குடல் பரிசோதனையான ‘கொலோனோஸ்கோபி’யில் புற்றுநோய் அல்லாத மூன்று கட்டிகளை மருத்துவர் கண்டறிந்தார். இந்நிலையில், மற்றவர்களும் பரிசோதனை செய்துகொள்ள திரு பே ஊக்குவிக்கிறார்.
சிங்கப்பூரில் புற்றுநோயைப் பொறுத்தமட்டில், பெருங்குடல் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. ஐம்பது வயதுக்கு மேற்பட்டோருக்கு அதிக அபாயம் நிலவுகிறது. எனவேதான், பரிசோதனை செய்துகொள்ள தாம் முடிவெடுத்ததாக திரு பே வெள்ளிக்கிழமை இரவு ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார். ஆகஸ்ட் இறுதியில் அவருக்கு 53 வயது பூர்த்தி அடைகிறது.
தொடக்கத்தில் அச்சம் நிலவினாலும், சக தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோ போ கூனிடம் கலந்தாலோசித்த பின்னர் திரு பே பரிசோதனை செய்துகொண்டார். திரு கோ பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார்.
“உணர்ச்சியை மட்டுப்படுத்தும் மருந்து செலுத்தப்பட்டதால், பரிசோதனையின்போதும் அதற்குப் பின்னரும் எனக்கு வலி தென்படவில்லை,” என்றார் திரு பே.
மூன்று கட்டிகளைக் கண்டறிந்த மருத்துவர், அவற்றை அகற்றினார். அவை ஒவ்வொன்றும் 0.2 செ.மீ. நீளமுடையவை. அவை அனைத்தும் புற்றுநோய் அல்லாத கட்டிகள் என்று திரு பே கூறினார்.
வழக்கமான பரிசோதனையின் ஒரு பகுதியாக அடுத்த மூன்று ஆண்டுகளில் மற்றொரு ‘கொலோனோஸ்கோபி’யை தாம் செய்துகொள்ளப் போவதாக அவர் தெரிவித்தார்.
“ஆரம்பகட்டத்திலேயே கண்டறியும்போது எந்தவொரு மருத்துவ நிலையையும் குணப்படுத்துவது எளிது. நம் வாழ்க்கையைப் பேணி முடிந்தவரை ஆரோக்கியத்துடன் வாழ்வோம்,” என்றார் அவர்.