துவாசில் வெள்ளிக்கிழமை ஒரு காரும் ஒரு மோட்டார்சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்தில் 32 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
துவாஸ் சவுத் ஸ்திரீட் 2, துவாஸ் சவுத் அவென்யூ 5 சாலைச் சந்திப்பில் நிகழ்ந்த விபத்து குறித்து மாலை 5.15 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது மோட்டார்சைக்கிளோட்டி சுயநினைவுடன் இல்லை. பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
அந்த மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற 30 வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார்.
இந்த விபத்துடன் தொடர்பில் 48 வயது ஆண் கார் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.