அடுத்த ஐந்தாண்டுகளில் புதிதாக எட்டுத் தாதிமை இல்லங்கள் அமையும்

அடுத்த ஐந்தாண்டுகளில் புதிதாக எட்டுத் தாதிமை இல்லங்கள் அமையும்

3 mins read
b5fe27aa-2af0-439d-8786-316498b9a5f7
சாய் சீ என்டியுசி தாதிமை இல்லவாசிகள் உண்டு, விளையாடி மகிழ்கிறார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மக்கள்தொகை வேகமாக மூப்படைந்து வருகிறது. அதனால் ஏற்படக்கூடிய தேவைகளை நிறைவேற்றும் வகையில் தாதிமை இல்லங்கள் விரிவடைந்து வருகின்றன.

அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தபட்சம் புதிதாக எட்டுத் தாதிமை இல்லங்கள் அமையவிருக்கின்றன.

தாதிமை இல்லங்களில் சேர்க்கப்படும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில் அத்தகைய இல்லங்களை நடத்தும் அமைப்புகள், விளையாட்டு, பொழுதுபோக்கு, தோட்டக்கலை, சமையற்கலை, சக முதியோருக்கு உணவுகளை விநியோகிப்பது போன்ற புதுப்புது வழிகளில் முதியோரை ஈடுபடுத்துவது பற்றி சிந்தித்து வருகின்றன.

தாதிமை இல்லங்களை நடத்தும் இரண்டு முக்கிய அமைப்புகள், புதிய இல்லங்களை திறக்கின்றன. அடுத்த ஆண்டு முடிவில் கிட்டத்தட்ட 1,000 புதிய படுக்கைகள் உருவாகும்.

செயின்ட் ஆண்ட்ருஸ் மிஷன் மருத்துவமனை 2024ல் இரண்டு தாதிமை இல்லங்களைத் திறக்கும்.

அல்ஜுனிட் வாக்கில் 342 படுக்கைகளுடன் ஓர் இல்லம் செயல்படும். மற்றொன்று தெம்பனிஸ் நார்த்தில் 277 படுக்கைகளுடன் திறக்கப்படும்.

ரென் சி என்ற மற்றொரு அமைப்பு, அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்தில் தன்னுடைய 3வது தாதிமை இல்லத்தைத் திறக்கவிருக்கிறது. அதில் 332 படுக்கைகள் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

மூத்தோர் பராமரிப்பு நிலையம் ஒன்றுடன் சேர்ந்து அந்தப் புதிய இல்லம் அமைக்கப்படும்.

சிங்கப்பூர், அடுத்த ஐந்தாண்டுகளில் 2,000க்கும் மேற்பட்ட இத்தகைய புதிய படுக்கைகளைச் சேர்க்க திட்டமிடுகிறது.

வரும் 2030வது ஆண்டு வாக்கில் சிங்கப்பூர் குடிமக்களில் நான்கில் ஒருவருக்கு குறைந்தபட்சம் 65 வயது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தை ஹுவா குவான் அறப்பணி அமைப்பு 2025 தொடக்கத்தில் தஞ்சோங் காத்தோங் ரோட்டில் 270 படுக்கைகளுடன் தாதிமை இல்லத்தைத் திறக்கிறது.

லியுக்ஸ் எல்டர்கேர் என்ற அமைப்பு, பொங்கோலில் 200 படுக்கைகளுடன் புதிய இல்லத்தை நிர்வகித்து நடத்தும். 2025வது ஆண்டு வாக்கில் அது ஆறு முதியோர் பராமரிப்பு நிலையங்களையும் நடத்தும்.

ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்பு 2026ஆம் ஆண்டு வாக்கில் ஈசூன் அவென்யூ 6ல் 302 படுக்கைகளுடன் கூடிய தாதிமை இல்லத்தை நிர்வகித்து நடத்தும்.

பிடோக் ரெசர்வோர் ரோட்டில் இந்த மாதம் இது தன்னுடைய மூன்றாவது முதியோர் பராமரிப்பு நிலையத்தை திறக்கவிருக்கிறது. அந்த நிலையம் சுமார் 300 பேருக்குச் சேவையாற்றும்.

ஆரஞ்ச் வேலி என்ற தனியார் தாதிமை இல்ல நிறுவனம் 2026வது ஆண்டு வாக்கில் பிடாடரியில் 298 படுக்கைகளுடன் தாதிமை இல்லத்தைத் திறக்கும்.

அந்த இல்லத்துடன் முதுமையில் இளமை நிலையமும் சேர்ந்து அமைந்து இருக்கும்.

தி லெண்டோர் ரெசிடன்ஸ் என்ற தனியார் அமைப்பு மெக்பர்சனில் இந்த மாதம் தாதிமை இல்லத்தைத் திறக்கிறது.

அடுத்த இரண்டு மாதங்களில் வெஸ்ட் கோஸ்ட்டில் புதிய இல்லத்தையும் அது திறக்கும்.

காக்கி புக்கிட்டில் 2026ஆம் ஆண்டிலும் ஜூரோங்கில் 2027ஆம் ஆண்டிலும் பொது தாதிமை இல்லங்கள் கட்டி முடிக்கப்படவிருக்கின்றன. அதே இடத்தில் புதிய பலதுறை மருந்தகங்களும் கட்டப்படும்.

2030ல் பிடாடரி பேட்டையில் ஒரு புதிய பலதுறை மருந்தகம் திறக்கப்படும். அதில் புதிய தாதிமை இல்லம் ஒன்றும் அமைந்து இருக்கும்.

பெரும்பாலான புதிய தாதிமை இல்லங்களைக் கட்டுவதற்கான மூலதனச் செலவை சுகாதார அமைச்சே ஏற்கிறது. பிறகு அத்தகைய இல்லங்களை நிர்வகித்து நடத்தும் பொறுப்பை தொண்டூழிய நல்வாழ்வு அமைப்புகளிடம் அல்லது தனியார் அமைப்புகளிடம் ஒப்பந்தப்புள்ளி வழி அமைச்சு ஒப்படைக்கிறது.

சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டு வாக்கில் ஏறக்குறைய 16,300 தாதிமை இல்ல படுக்கைகள் இருந்தன. அடுத்த 10 ஆண்டில் 31,000க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளன.

அதேபோல, இப்போது 119 ஆக இருக்கும் முதியோர் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 2025ல் 220 ஆக அதிகரிக்கவும் திட்டங்கள் உள்ளன.

சிங்கப்பூரில் தாதிமை இல்லத்தில் படுக்கை ஒன்றைப் பெறுவதற்குக் காத்திருக்க வேண்டிய சராசரி காலஅளவு ஏறக்குறைய ஒரு மாத காலமாகவே இருந்து வருகிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

என்டியுசி ஹெல்த் நிறுவனம்தான் சிங்கப்பூரில் தாதிமை இல்லங்களை நிர்வகித்து நடத்தும் ஆகப் பெரிய அமைப்பாகும்.

கடந்த இரண்டாண்டுகளில் பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் சேர்ந்த முதியோரின் எண்ணிக்கை 10% அதிகரித்து இருப்பதாக அது தெரிவித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்