‘பெப்பர் லஞ்ச்’ உணவக உணவில் கரப்பான்பூச்சி

‘பெப்பர் லஞ்ச்’ உணவக உணவில் கரப்பான்பூச்சி

படம்: கம்பிளெய்ண்ட் சிங்கப்பூர்/ ஃபேஸ்புக்

06 Aug 2023 - 12:28 pm

1 mins read

செங்காங்கின் காம்பஸ் ஒன் கடைத்தொகுதியில் ‘பெப்பர் லஞ்ச்’ எனும் ஜப்பானிய உணவகம் செயல்படுகிறது.

அதில் இருந்து இணைய உணவு விநியோகச் சேவை மூலம் தனது மகளுக்குத் தருவிக்கப்பட்ட சோற்றில் பூச்சி காணப்பட்டதாக லீ ஸ்டீவன் எனும் ஆடவர் கூறினார்.

சனிக்கிழமை கிரேப்ஃபுட் விநியோகச் சேவை மூலம் ‘சிக்கன் பெப்பர் ரைஸ் பௌல் செட் ஏ’ உணவைத் தருவித்ததாக ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ளார்.

“சிறிதளவு உண்டபிறகு, உணவில் கரப்பான்பூச்சி இருந்ததை என் மகள் கண்டாள். அது சமைக்கப்பட்டதைப்போல் காணப்பட்டது. அதனால் பயந்த அவளுக்குக் குமட்டல் ஏற்பட்டது,” என்றார் அவர்.

அவரது பதிவில் இடம்பெற்றுள்ள படத்தில் சோற்றில் பூச்சி ஒன்று காணப்படுகிறது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளித்த ‘பெப்பர் லஞ்ச்’ உணவகம் அந்த வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டது.

“இதன் தீவிரத்தன்மையை உணர்ந்திருக்கிறோம். எங்கள் தரப்பில் நிச்சயம் விசாரணை மேற்கொண்டு, உரிய விளக்கத்தை அளிப்போம்,” என்று அது கூறியது.

இச்சம்பவம் தொடர்பில் மேல்விவரங்களைப் பெற சிங்கப்பூர் உணவு அமைப்பை நாடியுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

குறிப்புச் சொற்கள்