மோசடிக்கு ஆளானபின் மனநல ஆலோசனை நாடும் இளையர்கள்

2 mins read
02aaef01-2c06-4d0f-b54a-da12e69e9d6f
2022ஆம் ஆண்டு மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெரும்பாலோரின் வயது 20 முதல் 30 என்று காவல்துறைப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. - சித்திரிப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மோசடிகளுக்கு ஆளான இளையர்கள் மனநலச் சிக்கல்களுக்காக ஆலோசனை நாடுவதாக சிங்கப்பூர் மனநல ஆலோசனை நிலையம் கூறியுள்ளது.

அண்மை ஆண்டுகளில் இத்தகைய இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அது குறிப்பிட்டது.

2022ஆம் ஆண்டில் மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர் $660.7 மில்லியனை இழந்த நிலையில் இந்தத் தகவல் வெளியானது. ஒப்புநோக்க, 2021ஆம் ஆண்டைவிட அது கிட்டத்தட்ட $28 மில்லியன் அதிகம்.

“அவர்கள் விருப்பத்திற்கு மாறாகப் பணமும் பெருமையும் பறிபோவது, எதிர்காலமும் வாழ்க்கையும் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று அவர்களைக் கருதத் தூண்டுகிறது,” என்று நிலையம் கூறியது.

மின்னிலக்கத் தளங்களைப் பயன்படுத்தும் தங்களின் திறன் குறித்து நம்பிக்கையுடன் இருக்கும் இளையர்கள் இத்தகைய மோசடிகளுக்கு இரையாவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று காவல்துறைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

2022ஆம் ஆண்டு மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெரும்பாலோரின் வயது 20 முதல் 30 என்று 2023 தொடக்கத்தில் வெளியிடப்பட்ட காவல்துறைப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக அவர்களில் 26.7 விழுக்காட்டினர் 20 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

மின்னஞ்சல் மோசடி, வேலைவாய்ப்பு மோசடி, மின்வர்த்தக மோசடி, முதலீட்டு மோசடி, போலியான நட்பு அழைப்புகள் ஆகியவற்றில் பெரும்பாலோர் பணத்தை இழந்தனர்.

பாதிக்கப்பட்ட இளையர்கள் அதை அவமானமாகக் கருதுகின்றனர். அது அவர்களின் தன்னம்பிக்கையைப் பாதிக்கிறது. இத்தகையோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுடன் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் கருதுகின்றனர்.

எளிதில் ஏமாறக்கூடியவர்கள் என்ற அவச்சொல் குறித்து அவர்கள் அஞ்சுவதாக சிங்கப்பூர் மனநல ஆலோசனை நிலையம் கூறியது.

இணையக் காதல் மோசடிக்கு ஆளானோர் அவநம்பிக்கையை வளர்த்துக்கொள்கின்றனர். சமூகத்திலிருந்து விலகிச் செல்லும் அவர்கள் மனநலச் சிக்கல்களால் பாதிக்கப்படுவதாக நிலையம் சொன்னது.

கடந்த இரண்டு மாதங்களில் இணைய விளையாட்டு, இணைய வர்த்தகம் ஆகியவற்றில் ஏமாற்றப்பட்ட இளையர்களின் எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டது.

மோசடிக்காரர்களின் நடத்தை இயல்பானது என்றோ ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றோ அத்தகைய இளையர்கள் கருதும் வாய்ப்பு உண்டு என்று வல்லுநர்கள் சுட்டினர்.

ஆனால் மோசடி குறித்துப் புகாரளிக்கும்படி இளையர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

பிள்ளைகள் மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டால் அதன் தொடர்பில் பள்ளி ஆலோசகர்களுடன் பெற்றோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வல்லுநர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்