சிங்கப்பூர் மஞ்சள் நாடா அமைப்பு, முன்னாள் குற்றவாளிகளுக்குப் பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை கிடைக்க உதவுகிறது.
இந்த அமைப்பிடம் ஏறக்குறைய 26 வாழ்க்கைத்தொழில் வல்லுநர்களும் வழிகாட்டிகளும் இருக்கிறார்கள்.
முன்னாள் குற்றவாளிகள் வேலைகளில் சேர்ந்து சம்பாதிப்பதால் அவர்களால் சுயமாகச் செயல்பட முடிகிறது.
அவர்களுடைய வாழ்க்கைத்தரம் உயர்கிறது. இதனால் மீண்டும் குற்றச்செயல் பக்கம் திரும்பும் எண்ணம் அவர்களிடத்தில் மறைகிறது என்று இந்த அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் குற்றவாளிகளுக்குப் பொருத்தமான வேலைகளைப் பார்த்து தந்து வாழ்க்கைத்தொழில் வல்லுநர்கள் உதவுகிறார்கள்.
இந்த அமைப்பு சென்ற ஆண்டில் 2,615 கைதிகளுக்கு உதவி இருக்கிறது. அவர்களில் 93 விழுக்காட்டினர் வேலை பெற்று இருக்கிறார்கள்.
வேலையைப் பெறுவதும் வேலையில் தொடர்ந்து இருந்து வருவதும் இதில் முக்கியமான இரண்டு அம்சங்கள்.
சிங்கப்பூர் மஞ்சள் நாடா அமைப்பின் வேலை உதவி முயற்சிகளின் மூலம் 2021ல் 2,969 கைதிகள் பலனடைந்தார்கள்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் 94 விழுக்காட்டினருக்கு வேலை கிடைத்தது.
ஆனாலும் அந்த வேலையில் தொடர்ந்து ஆறு மாதத்திற்குப் பிறகும் இருந்து வந்தவர்கள் 66 விழுக்காட்டினர்தான் என்று அந்த அமைப்பின் 2021ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
முன்னாள் கைதிகள் வேலைகளில் தொடர்ந்து இருந்து வருவதை வாழ்க்கைத்தொழில் வழிகாட்டிகள் உறுதிப்படுத்துகிறார்கள்.
வேலைகளில் சேர்ந்து இருக்கும் முன்னாள் கைதிகளுக்கு ஓராண்டு வரை தொடர்ந்து வழிகாட்டி அவர்கள் உதவுகிறார்கள்.
வேலை தொடர்பில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தீர்க்கவும் அந்த வழிகாட்டிகள் உறுதுணையாக இருந்து உதவுகிறார்கள்.
அத்தகைய வழிகாட்டிகளில் சிங்கப்பூர் மஞ்சள் நாடா அமைப்பைச் சேர்ந்த திரு கேப்ரியல் லீ, 34, என்பவர் ஒருவர்.
இவர் எந்தவொரு நேரத்திலும் 80 முதல் 90 முன்னாள் குற்றவாளிகளுடன் சேர்ந்து செயல்பட்டு அவர்களுக்கு உதவி வருகிறார்.


