வெளிநாட்டு ஊழியர்கள் இருவரின் கோரிக்கைகள் தொடர்பில் இரு காப்புறுதி நிறுவனங்கள் கிட்டத்தட்ட $77,000 தொகையை வழங்க வைக்க, தப்பியோடிய வழக்கறிஞர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவர்மீது செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
சட்டத் தொழில் சட்டத்தின்கீழ் ‘வைட்ஃபீல்ட் லா கார்ப்பரேஷன்’ எனும் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவருடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாக நம்பவைத்து சாஹா ரஞ்சித் சந்திரா, 48, அவ்விரு காப்புறுதி நிறுவனங்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்திய நாட்டவரான சாஹா, சார்ல்ஸ் இயோ யாவ் ஹுவி என்ற வழக்கறிஞரின் பெயரில் 2020லும் 2021லும் அந்தக் காப்புறுதி நிறுவனங்களுடன் தொடர்புகொண்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது ‘வைட்ஃபீல்ட் லா கார்ப்பரேஷன்’ நிறுவன இயக்குநராக இயோ இருந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022லிருந்து அவர் தலைமறைவாக உள்ளார்.
கிறிஸ்துவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக 2022ல் இயோ மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
சீர்திருத்தக் கட்சியின் முன்னாள் தலைவரான அவருக்கு எதிராக 2022 ஆகஸ்ட் மாதம் கைதாணை பிறப்பிக்கப்பட்டது.
கணக்கியல், நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையப்பக்கத்தில் தேடிப் பார்த்ததில், ‘வைட்ஃபீல்ட் லா கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் பங்குதாரராகவோ இயக்குநராகவோ இயோ இல்லை என்பது தெரிய வருகிறது.
எனினும், ‘சார்ல்ஸ் இயோ லா பிராக்டிஸ்’ எனும் நிறுவனத்தில் இயோ பங்குதாரராகவும் இயக்குநராகவும் உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
‘சார்ல்ஸ் இயோ லா பிராக்டிஸ்’ நிறுவனத்தில் 2020 வரை சாஹா இயக்குநராகவும் பங்குதாரராகவும் இருந்தார் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சாஹா மீது செவ்வாய்க்கிழமை இரு மோசடிக் குற்றச்சாட்டுகள் உட்பட ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.