வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீட்டுச் சந்தை உச்சத்தை எட்டி இருக்கக்கூடும் என்று ‘புராப்பர்ட்டி குரு’ என்ற நிறுவனம் திங்கட்கிழமை தெரிவித்தது.
மறுவிற்பனை வீடுகளின் விலையேற்றம் மெதுவடைந்து இருக்கிறது. தேவையும் குறைந்து இருக்கிறது.
இவற்றை வைத்துப் பார்க்கையில், அந்தச் சந்தை உச்சத்தைத் தொட்டிருக்கக்கூடும் என்பது தெரியவருவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டு இருக்கிறது.
தனியார் வீட்டுச் சந்தையும் உச்சத்தை நெருங்கி வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
வரும் காலாண்டுகளில் வீடுகளின் விலை நிலைப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
புராப்பர்ட்டி குரு சிங்கப்பூர் இணையத்தளத்தில் இடம்பெற்று இருக்கும் 600,000க்கும் மேற்பட்ட வீடுகளின் விவரங்களைப் பகுப்பாய்வு செய்து பார்க்கையில், குடியிருப்புச் சொத்து சந்தை வேகம் குறைவதற்கான அறிகுறிகள் தெரியவருவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டு இருக்கிறது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மறுவிற்பனை வீடுகளுக்கான தேவையைக் காட்டும் சிங்கப்பூர் சொத்து விற்பனைத் தேவை அட்டவணை இந்த ஆண்டின் 2வது காலாண்டில் 6.4% இறங்கி இருக்கிறது.
இந்த அட்டவணை புராப்பர்ட்டி குரு சிங்கப்பூர் இணையத்தளத்தில் இடம்பெறக்கூடிய அனைத்து சொத்துகளின் விற்பனைப் பட்டியல் தொடர்பான விசாரிப்புகளின் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
விற்பனைத் தேவை அட்டவணை என்பது சந்தைப் போக்கின் நிலவரங்களை முன்னதாகவே எடுத்துக்காட்டுவதாக இருக்கும். அது சொத்துகளை வாங்குவோரின் நாட்டங்களைப் பிரதிபலிக்கும்.
அவற்றை வைத்துப் பார்க்கையில் வீவக மறுவிற்பனைச் சந்தை அதன் உச்சத்தைத் தொட்டு இருப்பதாகத் தெரியவருகிறது என்று அந்த நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது.
வீவக மறுவிற்பனை வீட்டை வாங்கிக்கொள்வதாக கொள்முதல்காரர்கள் கேட்கும் விலையில் இடம்பெறக்கூடிய அதிகரிப்பும் மெதுவடைந்து இருக்கிறது.
இந்த அதிகரிப்பு முதல் காலாண்டில் 1.6% ஆக இருந்தது. அது 2வது காலாண்டில் 0.6% ஆகக் குறைந்து இருக்கிறது.
1,000 சதுர அடி பரப்புள்ள நாலறை வீட்டை இப்போது S$571,900 விலைக்கு வாங்கிக்கொள்ள கொள்முதல்காரர்கள் முன்வருகிறார்கள். இந்த விலை S$555,800 ஆக இருந்தது என்பது புராப்பர்ட்டி குரு புள்ளிவிவரங்களைப் பார்க்கையில் தெரியவருகிறது.
வீடுகளை வாங்குவோர் கொடுக்க முன்வரும் பணத்திற்கும் வீடுகளை விற்போர் கேட்கும் பணத்திற்கும் இடையிலான வேறுபாடு அவ்வளவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
கொள்முதல்காரர்களுக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதால் அவர்கள் நெருக்குதல்களுக்கு அவ்வளவாக இணங்குவதில்லை.
பிடிஓ வீடுகள் அதிகமாகக் கட்டப்படுகின்றன. இந்த ஆண்டில் சுமார் 16,000 வீடுகள் குறைந்தபட்ச குடியிருப்பு நிபந்தனையைப் பூர்த்தி செய்து விற்பனைக்கு வரும் வாய்ப்பும் இருக்கிறது.
சொத்துச் சந்தையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் 2021 டிசம்பரிலும் 2022 செப்டம்பரிலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் நடைமுறைக்கு வந்தன.
இருந்தாலும்கூட 2022 இரண்டாவது காலாண்டில் இருந்து வீவக மறுவிற்பனை விலை அட்டவணை 33.6% கூடி இருக்கிறது.

