வீடமைப்புத் திட்டங்கள் சரியாக்கம்; முதிய ஊழியருக்குக் கூடுதல் உதவி

தேசிய தினச் செய்தியில் பிரதமர் கோடிகாட்டினார்

பொது வீடமைப்புத் திட்டங்கள் அனைவருக்கும் நியாயமாகவும் எல்லாரையும் உள்ளடக்கும் வகையிலும் இருக்குமாறு சரிசெய்யப்படும்.

வீடுகள் அனைத்து வருமானப் பிரிவுகளைச் சேர்ந்த சிங்கப்பூரர்களுக்கும் எட்டக்கூடியவையாக, தாக்குப்பிடிக்கக்கூடியவையாக தொடர்ந்து இருந்து வருவது உறுதிப்படுத்தப்படும்.

மத்திய சேமநிதி சேமிப்பில் ஓய்வுக் காலத்திற்குப் போதிய பணத்தைக் கொண்டிராத சில முதிய ஊழியர்களுக்குக் கூடுதல் உதவியும் கிடைக்கும்.

பிரதமர் லீ சியன் லூங் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்.

பிரதமர் ஆகஸ்ட் 20ஆம் தேதி தேசிய நாள் பேரணி உரை நிகழ்த்துவார். அதில் இந்த இரண்டு அம்சங்களையும் பற்றி மேலும் பல விவரங்களைத் தெரிவிக்கப்போவதாக திரு லீ செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டார்.

குவீன்ஸ்டவுனில் டாசன் என்ற இடத்தில் உள்ள ஸ்கைஓயேசிஸ் பேட்டையில் பிரதமர் லீயின் தேசிய தினச் செய்தி படமாக்கப்பட்டது. அந்தச் செய்தி செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

நல்ல, கட்டுப்படியாகக்கூடிய வீட்டைக் கொண்டிருப்பது சிங்கப்பூரர்களின் முக்கிய விருப்பமாக இருக்கிறது என்பதைப் பிரதமர் சுட்டினார்.

“சிங்கப்பூரின் பழைய குடியிருப்புப் பேட்டைகளில் குவீன்ஸ்டவுனும் ஒன்று. 15 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பேட்டைக்கு புதுப்பொலிவு அளிக்கும் முயற்சிகள் தொடங்கின.

“மிகக் கவர்ச்சிகரமான வீவக குடியிருப்புப் பேட்டைகளில் ஒன்றாக இப்போது டாவ்சன் பேட்டை திகழ்கிறது. அது சிங்கப்பூர் பொது வீடமைப்பு வரலாற்றின் ஒளிமயமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது,” என்று திரு லீ குறிப்பிட்டார்.

பற்பல ஆண்டுகளாகவே அரசாங்கம் பெரும் பணத்தை முதலீடு செய்து மில்லியன் கணக்கான சிங்கப்பூரர்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய, எட்டக்கூடிய உயர்தர வீவக வீடுகளைக் கட்டிக் கொடுத்து இருக்கிறது.

கழகம் இதுவரை முதிர்ச்சியடைந்த, முதிர்ச்சியடையாத பேட்டைகளில் வீடுகளைக் கட்டி வருகிறது. இப்போதைய முதிர்ச்சியடையாத பேட்டைகள் சீராக முதிர்ச்சியடைந்து வருகின்றன. அப்போதைக்கு அப்போது இப்போதைய பேட்டைகளில் மேலும் மேலும் புதிய வீவக வீடுகள் கட்டப்படும்.

இத்தகைய வீடுகளுக்குப் பொதுவாகவே தேவை அதிகமாக இருக்கும். இதை அவற்றின் விலையில் இருந்தும் அவற்றின் மறுவிற்பனை விலையில் இருந்தும் தெரிந்துகொள்ளலாம்.

இத்தகைய மாற்றங்கள் இடம்பெற்று வந்தாலும் அனைத்து வருமானப் பிரிவுகளைச் சேர்ந்த சிங்கப்பூரர்களுக்கும் அரசாங்க வீடுகள் எட்டக்கூடியதாக, தாக்குப்பிடிக்கக்கூடியதாக இருப்பதை அரசாங்கம் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது என்று திரு லீ குறிப்பிட்டார்.

“வீடமைப்புத் திட்டங்கள் அனைவருக்கும் நியாயமானவையாக இருக்க வேண்டும். எல்லாரையும் உள்ளடக்கியவையாக இருக்க வேண்டும். இதுவே சிங்கப்பூரர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் உறுதிமொழி,” என்று திரு லீ தெரிவித்தார்.

சிங்கப்பூரின் மக்கள்தொகை வேகமாக மூப்படைந்து வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் வீவக பேட்டைகளும் வீடுகளும் திகழ்வதை உறுதிப்படுத்த அரசாங்கம் சிறப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

குறைந்த வருமான ஊழியர்களுக்கு உதவும் நோக்கத்துடன் மத்திய சேம நிதி முறை ஏறுமுக ரீதியில் மேம்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

இருந்தாலும் கூட சில முதிய ஊழியர்கள் தங்கள் ஓய்வுக்காலத்திற்குப் போதிய சேமநிதி சேமிப்பை இன்னமும் கொண்டிருக்கவில்லை.

இவர்களுக்குக் கொஞ்சம் கூடுதல் உதவி செய்யலாம் என்று திரு லீ குறிப்பிட்டார்.

இருந்தாலும் அரசாங்கம் ஓரளவுக்குத்தான் செயல்பட முடியும் என்ற பிரதமர், நம்மில் ஒவ்வொருவரும் அவரவர் பங்கை ஆற்றி உடல்நலத்துடன் திகழ வேண்டும். சிறந்த உடல்நலமே சிறந்த செல்வம் என்றும் வலியுறுத்திக் கூறினார்.

முன்னேறும் சிங்கப்பூர் இயக்கம் பற்றிய தகவல்களையும் திரு லீ வெளியிட்டார்.

அந்த தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் அவருடைய நான்காம் தலைமுறைக் குழுவினரும் செயல்பட்டு வரும் அம்சங்களில் வீடமைப்பு, மூப்படையும் சமூகம் ஆகியவையும் அடங்கும் என்று திரு லீ குறிப்பிட்டார்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான பல பிரச்சினைகள் அண்மையில் இடம்பெற்றது பற்றியும் திரு லீ தமது செய்தியில் குறிப்பிட்டார்.

“அத்தகைய பிரச்சினைகள் அப்போதைக்கு அப்போது எழுகின்றன. அவை எழும்போது அவற்றை முறையாக, ஒளிவுமறைவு இல்லாமல் நாம் கையாளுகிறோம்.

“இதையேதான் நாம் எப்போதும் செய்து வந்திருக்கிறோம். இப்போதும் இதைத்தான் செய்திருக்கிறோம்,” என்று திரு லீ குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!