தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கண்கவர் வாணவேடிக்கை; மெர்லயன் பூங்கா, மரினா அணைக்கட்டில் ‘செங்கடல் வண்ணம்’

2 mins read
073011e6-3412-4fd2-81ec-beb2190bb3cf
தேசிய தின அணிவகுப்பையொட்டி இடம்பெறும் வாணவேடிக்கையைக் கண்டுகளிக்க மெர்லயன் பார்க்கில் பிற்பகல் நேரத்திலேயே மக்கள் குவிந்துவிட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

வெயில் அடித்தாலும் வெப்பம் மிகுந்தாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சிவப்பு-வெள்ளை உடையில் ஆயிரமாயிரம் சிங்கப்பூரர்கள் நகர் முழுவதும் திரண்டு நாட்டின் 58வது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மாலை நேர வாணவேடிக்கையைக் கண்டுகளிக்க விருப்பமான இடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு மகிழ்ச்சியில் அவர்கள் திளைத்தனர்.

மெர்லயன் பூங்கா, மரினா அணைக்கட்டு இரண்டு இடங்களும் மக்களைப் பெரிதும் கவரும் இடங்களாக இருந்தன.

நாட்டின் பல திசைகளில் இருந்தும் ஏராளமானவர்கள் அங்கு திரண்டு வாணவேடிக்கையை முழுமையாகக் கண்டு பிரமிக்க வேண்டும் என்று விரும்பினர்.

வாணவேடிக்கை தொடங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே மெர்லயன் பூங்கா முழுவதும் நிரம்பி இருந்தது.

மடக்கு நாற்காலிகளும் மகிழ்உலா தரை விரிப்புகளும் ஏராளமான குடைகளும் எங்கும் காணப்பட்டன.

சூரிய வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் குடைகளைக் கொண்டு தங்களைத் தற்காத்துக்கொண்டு மக்கள் மிக்க ஆர்வத்துடன் காத்திருந்ததைக் காண முடிந்தது.

பரபரப்பான கூட்டத்தினரிடையே பிரான்சிஸ் தியோ என்ற 73 வயது முதியவர் அமைதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு கூட்டத்தையும் ஆகாயத்தையும் படம் வரைந்து கொண்டிருந்தார்.

திரு தியோவும் ஏறக்குறைய 50 ஓவியர்களும் தேசிய தினத்தன்று சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களுக்கும் சென்று காட்சிகளை ரசிப்பதுண்டு; படம் வரைந்து பத்திரப்படுத்துவதுண்டு.

“செங்கடல்போல் எங்கும் சிவப்பாகத் தெரிகிறது. இதைப் படம் வரைவது அருமையாக இருக்கிறது. முன்னதாகவே போய்விடலாம் என்றுதான் இருந்தோம்.

“ஆனால், இங்கிருக்கும் சூழ்நிலையைப் பார்க்கும் போது கடைசி வரை மக்களோடு மக்களாக இருந்து தேசிய நாளைக் கொண்டாட வேண்டும் என்ற உணர்வு பொங்கியது,” என்று திரு தியோ கூறினார்.

தேசிய தினத்தைக் கொண்டாடி மகிழ வேண்டும்; வாணவேடிக்கையை முழுமையாக, அருமையாகப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திரு டேவிட் சோவ் என்பவர் முன்னதாகவே பல ஏற்பாடுகளுடன் வந்துவிட்டார்.

பொறியியல் துறையில் வேலை பார்க்கும் இந்த 53 வயது ஆடவர், கையில் எடுத்துச்செல்லக்கூடிய தொலைக்காட்சியுடன் வந்தார்.

‘‘அணிவகுப்பை தொலைக்காட்சியில் கண்டு மகிழ்வேன். வாணவேடிக்கை தொடங்கும்போது அதை நேரடியாகப் பார்ப்பேன்’’ என்றார் அவர்.

சிறார் கொடிகளை அசைத்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

ஏழு பேர் அடங்கிய தம் குடும்பத்துடன் பொங்கோலில் இருக்கும் தம் வீட்டில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு மெர்லயன் பூங்காவிற்கு 60 வயது மாது ஒருவர் வந்தார்.

ஆனால், ஏற்கெனவே அங்கு மக்கள் நிரம்பி இருந்ததைக் கண்டு வியந்துபோனார்.

எப்படியோ ஓரிடத்தைப் பிடித்து எல்லாரும் ஒரு தரை விரிப்பைப் போட்டு அமர்ந்துகொண்டனர்.

“இப்போதுதான் முதன்முதலாக வாணவேடிக்கையைப் பார்க்க என் பேரப்பிள்ளைகளை அழைத்து வந்திருக்கிறேன். மிகவும் உற்சாகமாக இருக்கிறது,” என்று அந்த மாது கூறினார்.

சிங்கப்பூரின் தேசிய தினத்தை சிங்கப்பூரர்கள் மட்டுமின்றி, இங்கு வேலை பார்க்கும் வெளிநாட்டினரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்