அதிபர் ஹலிமா யாக்கோப் கடைசி முறையாக புதன்கிழமை தேசிய தின அணிவகுப்புக்குத் தலைமை தாங்கினார்.
அதிபர் என்ற முறையில் அவர் இத்துடன் ஆறாவது அணிவகுப்பைத் தலைமை தாங்கி நடத்தி இருக்கிறார்.
அதிபர் ஹலிமா, 68, பாடாங்கிற்கு புதன்கிழமை மாலை 6.50 மணிக்கு வருகையளித்தபோது அரங்கில் கூடியிருந்தவர்கள் கைதட்டி அவருக்குப் பெரும் வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.
சிங்கப்பூரின் 58வது தேசிய தினக் கொண்டாட்டம் புதன்கிழமை மிகக் கோலாகலமாக நடந்து முடிந்தது.
பாடாங்கில் அணிவகுப்பைக் காண 27,000 பேர் திரண்டு இருந்தார்கள். அவர்களின் அன்பு வரவேற்பை ஏற்றுக்கொண்டு அவர்களை நோக்கி கையசைத்தபோது தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டதாக திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.
“இத்தகைய உணர்வு நீங்கள் கட்டுப்படுத்த முடியாத ஒன்று,” என்று கண்களில் நீர் ததும்பிய நிலையில் அதிபர் தெரிவித்தார்.
திருவாட்டி ஹலிமா 2002ல் ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் முதன்முதலாக தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொண்டார். அவர் 2001 நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.
சிங்கப்பூரின் எட்டாவது அதிபராக 2017ல் பொறுப்பேற்றுக்கொண்ட திருவாட்டி ஹலிமா, 2018ல் முதன்முதலாக தேசிய தின அணிவகுப்பிற்குத் தலைமை வகித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதில் தான் போட்டியிடப்போவதில்லை என்று கடந்த மே மாதம் திருவாட்டி ஹலிமா அறிவித்துவிட்டார்.
தேசிய தின அணிவகுப்புகளில் உங்கள் மனதை மிகவும் கவர்ந்தது எது என்று கேட்டபோது, எதையாவது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வது என்பது மிகவும் சிரமமானது என்றார் அவர்.
இருந்தாலும் இந்த ஆண்டின் அணிவகுப்பு சிறப்பான ஒன்று. கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு முழுமையாக, முழுவீச்சில் நடைபெற்ற முதலாவது அணிவகுப்பு இந்த ஆண்டில் நடந்தது என்று அவர் சுட்டினார்.
இந்த ஆண்டின் அணிவகுப்பில் முழுமைத் தற்காப்பின் ஆறு தூண்களையும் விளக்கும் வகையில் ஆறு மிதவைகள் இடம்பெற்றன.
அவை வீட்டில் அன்றாடம் பயன்படக்கூடிய பொருள்களைப் பயன்படுத்தி முழுமைத் தற்காப்பின் ஆறு தூண்களில் ஒவ்வொன்றும் ஏன் முக்கியம் என்பதை பொதுமக்களுக்கு விளக்கிக் காட்டின.
புதன்கிழமை நடந்த தேசிய அணிவகுப்பை அதிபர் பார்வையிட்டபோது நான்கு பீரங்கிகள் 21 முறை முழங்கின. அணிவகுப்பைப் பார்வையிட்ட போது மரியாதைக் காவல் அணியில் உள்ள சிலருடனும் அதிபர் கலந்துறவாடினார்.
திருவாட்டி ஹலிமா 2018 முதல் தேசிய தின அணிவகுப்புகளில் பங்கெடுத்துக்கொண்டதைக் காட்டும் சிறப்புக் காணொளி பெரும் பெரும் திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கொவிட்-19 தொற்றுக் காலத்தின்போது மெய்நிகர் முறையில் நடந்த அணிவகுப்பும் அதில் இடம்பெற்றிருந்தது.
அணிவகுப்பு தொடங்க அனுமதி அளிக்கும்படி அணிவகுப்பின் தளபதியான லெப்டினண்ட் கர்னல் ரகுமாறன் தேவேந்திரன் அதிபரிடம் கேட்டபோது அவருக்கு உணர்வுபொங்க, உறுதிபட அதிபர் அனுமதி வழங்கினார்.
அணிவகுப்பு முடிந்து தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு பாடாங் திடலுக்குச் சென்ற அதிபர் ஹலிமா, நிகழ்ச்சிகளை அரங்கேற்றியவர்கள், கலைஞர்கள் சிலருடன் படம் எடுத்துக்கொண்டார்.
அதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
தேசிய தின அணிவகுப்பு சிங்கப்பூரர் ஒவ்வொருவரின் மனதிலும் ஊடுருவி எப்போதுமே இடம்பிடித்துவிடும் என்று அவர் தெரிவித்தார்.
தேசிய தின அணிவகுப்பிற்கு நீங்கள் எப்போது வந்தாலும் அது உங்கள் மனதைக் கவர்ந்துவிடும்.
ஏராளமான சிங்கப்பூரர்கள் குழுமி இருப்பார்கள். தேசிய நாளைக் கொண்டாடி மகிழ்வார்கள்.
உண்மையிலேயே அது மிக அருமையான நிகழ்ச்சியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, திருவாட்டி ஹலிமா சிங்கப்பூருக்கு ஆற்றி இருக்கும் தொண்டுகளுக்காக திருவாட்டி மாலதி பரத்வாஜ், 48, என்ற குடும்ப மாது அதிபருக்கு நன்றி கூறினார்.
சிங்கப்பூரில் அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முதலாவது பெண்மணி என்ற முறையில் திருவாட்டி ஹலிமா நம் அனைவருக்கும் பெருமை சேர்த்து இருக்கிறார் என்று அந்த மாது தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அவரைப் போன்ற மேலும் பல பெண்கள் அதிபர் பொறுப்பை ஏற்பார்கள் என்றும் தான் நம்புவதாக அந்த மாது கூறினார்.