தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாடாங்கில் மீண்டும் கோலாகல அணிவகுப்பு

2 mins read
8b642760-d1bd-4a75-b066-abf20e2fdd0e
இரவைப் பகலாக்கிய வாணவேடிக்கை வர்ணஜாலம் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் 58வது தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் புதன்கிழமை பாடாங் ஒலி, ஒளி வண்ணத்துடன் ஜொலித்தது.

இந்த ஆண்டில் நடந்த தேசிய தின அணிவகுப்பில் முதலும் முடிவுமாக பலவும் இடம்பெற்றன.

பாடாங்கில் 27,000 பேர் கூடி இருந்தார்கள். பழைய, புதிய பாடல்களை அவர்கள் சேர்ந்து பாடினார்கள். அந்தச் சூழலே இசை நிகழ்ச்சி போல எங்கும் ஒலித்தது.

தேசிய தினக் கொண்டாட்டம் 5.35 மணிக்குத் தொடங்கியது என்றாலும் பலரும் பாடாங்கிற்கு முன்னதாகவே வந்துவிட்டார்கள்.

வெப்பம் அதிகமாக இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் சோதனைகளும் பலப்படுத்தப்பட்டு இருந்தன. அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் பக்கத்தில் உள்ள மரினா பேயிலும் ஆயிரக்கணக்கில் குழுமி இருந்தனர்.

கைப்பேசிகள், படச்சாதனங்கள் பலவற்றோடும் அவர்கள் தயாராக வந்திருந்தார்கள். இரண்டு மணி நேரம் அணிவகுப்பு நடந்தது. அதற்கு முத்தாய்ப்பாக 10 நிமிட வாணவேடிக்கை விண்ணை ஜொலிக்க வைத்தது.

‘ஒரே மக்களாக முன்னேறுவோம்’ என்பது இந்த ஆண்டின் கருப்பொருள்.

பாடாங்கில் 2019க்குப் பிறகு முழு வீச்சில் முழுமையாக இந்த ஆண்டுதான் தேசிய தினக் கொண்டாட்டங்கள் நடந்தன.

இந்த ஆண்டு அணிவகுப்பில் முழு அளவிலான அணிவகுப்பு அணிகளும் இடம்பெற்றன. அவற்றில் ராணுவம், குடிமைத் தற்காப்பு, இளையர் சீருடைக் குழுக்கள், பல்வேறு சமூகப் பொருளியல் ஆகியவற்றைச் சேர்ந்த 1,700 பேர் கலந்துகொண்டார்கள்.

சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் ஐந்து மரியாதை அணிவகுப்பு அணிகள் இந்த ஆண்டு அணிவகுப்பில் பீடு நடைப்போட்டன.

ஆயுதப் படைகளின் நான்காவது தூணான மின்னிலக்க, வேவுச் சேவை முதன்முதலாக அணிவகுப்பில் இடம்பெற்றது.

அதிபர் ஹலிமாவை பொறுத்தவரை இந்த அணிவகுப்பே அவர் தலைமை தாங்கும் இறுதி அணிவகுப்பாகும்.

அணிவகுப்பில் எட்டு சிவப்பு சிங்க வான்குடை சாகச வீரர்கள் சுமார் 3 கி.மீ. உயரத்தில் இருந்து பாதுகாப்பாக தரையிறங்கினார்கள். அதைக் கண்ட பொதுமக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

அதனையடுத்து 34 அணிகள் பீடு நடைபோட்டன. தேசியக்கொடி அணிவகுப்பு இடம்பெற்றது. நாட்டிற்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் எஃப்-16டிபிளஸ் போர் விமானங்கள் சாகச காட்சியை அரங்கேற்றின.

சிங்கப்பூர் ஆயுதப் படைகள் தனது 55வது ஆண்டுவிழாவை நினைவுகூரும் வகையில் புல்லரிக்க வைத்த சாகசங்களை நிகழ்த்தின.

இந்த ஆண்டின் மேலும் ஒரு சிறப்பம்சமாக 650 பேர் பங்கெடுத்த முழுமைத் தற்காப்பு அணிவகுப்பும் ஆறு மிதவைகளுடன் இடம்பெற்றது.

அதோடு, சிங்கப்பூர் ஆகாயப் படைகள், சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த ராணுவ, குடிமை வாகனங்கள் அணிவகுத்தன.

அணிவகுப்பின் முத்தாய்ப்பாக பாடாங்கிற்கு உயரே வாணவேடிக்கை இடம்பெற்றது.

சிங்கப்பூரின் இளையர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு தலைமை தாங்குவதை சித்திரிக்கும் வகையில் தங்கச் சிங்கம் ஒன்று ஆகாயத்தில் பாய்ந்து செல்வதாக ஒரு காட்சியும் வாணவேடிக்கையில் இடம்பெற்றது.

குறிப்புச் சொற்கள்