வீவக மறுவிற்பனை வீட்டு விலையும் எண்ணிக்கையும் அதிகரிப்பு

2 mins read
2e625a0e-d5a6-4a68-ac4f-422b7bba07f4
கடந்த ஈராண்டுகளுடன் ஒப்புநோக்க, 2023ன் முதல் ஏழு மாதங்களில் வீவக மறுவிற்பனை வீட்டு விலையின் வளர்ச்சி விகிதம் மெதுவடைந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை ஜூலை மாதத்தில் 0.3 விழுக்காடு உயர்ந்தது. இருப்பினும் கூடுதலான வீடுகள் கைமாறியதாகக் கூறப்பட்டது.

தொடர்ந்து மூன்றாவது மாதமாக, கழக மறுவிற்பனை வீட்டு விலை உயர்வு ஒரு விழுக்காட்டிற்குக்கீழ் பதிவாகியுள்ளது. சொத்துச் சந்தை நிறுவன இணையத்தளங்களான ‘99.கோ’, ‘எஸ்ஆர்எக்ஸ்’ ஆகியவை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் அதனைத் தெரிவித்தன.

2021, 2022ஆம் ஆண்டுகளுடன் ஒப்புநோக்க, 2023ன் முதல் ஏழு மாதங்களில் வீவக மறுவிற்பனை வீட்டு விலையின் வளர்ச்சி விகிதம் மெதுவடைந்துள்ளது. வீட்டு விலை தணிந்திருப்பதை இது காட்டுவதாக ‘ஆரஞ்சு டீ அண்ட் டை’ நிறுவனம் கூறியது.

2023 ஜனவரி முதல் ஜூலை வரை, கழக மறுவிற்பனை வீட்டு விலை 4.2 விழுக்காடு அதிகரித்தது. 2022ல் அந்த விகிதம் 6 விழுக்காடாகவும் 2021ல் 8.2 விழுக்காடாகவும் இருந்தது.

மறுவிற்பனை வீட்டு விலை இனி மேலும் அதிகரிக்காது எனக் கருதப்படுகிறது.

முன்னதாக, மறுவிற்பனை வீட்டு விலை தொடர்ந்து 31 மாதங்களாக அதிகரித்தது. 2022 பிப்ரவரியில் 0.1 விழுக்காடு குறைந்தபோதும் அடுத்த ஐந்து மாதங்கள் அது மீண்டும் அதிகரித்தது.

வீடு வாங்க விரும்புவோருக்குத் தற்போது கூடுதல் தெரிவுகள் இருப்பதை கவனிப்பாளர்கள் சுட்டினர்.

ஜூலை மாதம், முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் கழக மறுவிற்பனை வீட்டு விலை 0.4 விழுக்காடு குறைந்தது. முதிர்ச்சியடையாத பேட்டைகளில் அது 0.4 விழுக்காடு கூடியது.

முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் வீட்டு விலை அதிகம் என்பதால் வீடு வாங்க விரும்புவோர் அதிகத் தொகையைச் செலவிட இயலாத நிலையில் முதிர்ச்சியடையாத பேட்டைகளில் உள்ள வீடுகளை நாடியிருக்கக்கூடும் என்கின்றனர் கவனிப்பாளர்கள்.

இவ்வேளையில், ஜூலை மாதம் கூடுதலாக 10.7 விழுக்காடு மறுவிற்பனை வீடுகள் கைமாறின.

ஜூன் பள்ளி விடுமுறைக் காலத்திற்குப் பிறகு அவ்வாறு எண்ணிக்கை கூடுவது வழக்கம் என்பதையும் சிலர் ‘ஹங்ரி கோஸ்ட்’ மாதம் அனுசரிக்கப்படும் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 14 வரையிலான காலகட்டத்திற்கு முன்னரே வீடு வாங்க விரும்புவதும் இதற்குக் காரணங்களாகக் கருதப்படுகிறது.

ஜூலை மாதம் 32 கழக மறுவிற்பனை வீடுகள் $1 மில்லியனுக்கு விற்பனையாயின. ஆக அதிகமாக, ‘பீக் அட் தோ பாயோ’வில் ஓர் ஐந்தறை வீடு $1.38 மில்லியனுக்கு விற்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்