லிட்டில் இந்தியா வட்டாரத்தில் மதுபானக்கூடம் நடத்தும் 41 வயது ராஜ்குமார் பாலா எனும் ஆடவர் தன்னிடம் வேலைபார்த்த 17 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அவர் விசாரிக்கப்பட்டார்.
அச்சிறுமி சிங்கப்பூர் சிறுமியர் காப்பகத்திலிருந்து தப்பிச்சென்றவர் என்று கூறப்பட்டது. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி இரவுக்கும் மறுநாள் அதிகாலைக்கும் இடையே வாடகை வீடு ஒன்றில், சிறுமியிடம் ராஜ்குமார் தகாதமுறையில் நடந்துகொண்டார்.
ராஜ்குமார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க 13 பேர் சாட்சியமளிப்பர் என்று அரசாங்க வழக்கறிஞர்கள் கூறினர்.
சாட்சிகளில் ‘பி1’, ‘பி2’ என நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் இருவரும் அடங்குவர். அவர்கள் இருவரும் சிறுமியர் காப்பகத்திலிருந்து தப்பிச்சென்று ராஜ்குமாரிடம் வேலைபார்த்தவர்கள்.
பாதிக்கப்பட்ட சிறுமி, 2020 பிப்ரவரியில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தபோது, ‘பி1’, ‘பி2’ இருவருடனும் தங்கிக்கொள்ளும்படி ராஜ்குமார் கூறினார்.
சிறுமிகளின் நண்பர் அளித்த புகாரின்பேரில் காவல்துறை 2020 பிப்ரவரி 21ஆம் தேதி இரவு மதுபானக்கூடத்தில் சோதனை மேற்கொண்டது.
அதனால் மூவரையும் ராஜ்குமார் வாடகை வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்கு உணவும் மதுபானமும் தந்ததுடன் தானும் மது அருந்தியதாகக் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததை ‘பி1’ நேரில் பார்த்தார்.
மறுநாள் காலை அதுகுறித்து ‘பி2’விடம் கூறிய சிறுமி, அங்கிருந்து வெளியேறிவிட்டார். பின்னர் நண்பருடன் வேறு இடத்தில் தங்கிய அவர், ஜூலை 2020ல் காப்பகத்தில் சரணடைந்தார். 2020 ஆகஸ்ட் 5ஆம் தேதி அங்கு வந்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் ஊழியரிடம் தனக்கு நேர்ந்தது குறித்து சிறுமி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பாலியல் வன்கொடுமை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராஜ்குமாருக்கு 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமோ பிரம்படியோ விதிக்கப்படலாம். சிறுமியை மானபங்கப்படுத்திய குற்றத்திற்கு ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமோ பிரம்படியோ விதிக்கப்படலாம்.

