ஃபாங் ஜெய் வெய் என்னும் 22 வயது ஆடவர் 600 வெள்ளி மதிப்புமிக்க போக்கிமான் அட்டைகளைத் திருடிய சந்தேகத்தில் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
ஆடவர் மீது மூன்று திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சந்தேக நபர் மே மாதம் 2ஆம் தேதி பயா லேபார் ஸ்கொயர் கடைத்தொகுதிக்கு சென்று அங்குள்ள கடை ஒன்றில் 212 வெள்ளி மதிப்புள்ள போக்கிமான் அட்டைகளைத் திருடி உள்ளார்.
இரண்டு நாள்களுக்குப் பிறகு அவர் பயா லேபார் சாலையில் உள்ள கடை ஒன்றில் 110 வெள்ளி மதிப்புள்ள போக்கிமான் அட்டைகளை மீண்டும் திருடியுள்ளார்.
பிறகு மே 8ஆம் தேதி அவர் காமன்வெல்த் அவென்யூவில் உள்ள கடை ஒன்றில் 270 வெள்ளி மதிப்புள்ள போக்கிமான் அட்டைகளைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அதன் பின்னர் ஃபாங் மீண்டும் பயா லேபார் ஸ்குவேர் கடைத்தொகுதிக்குச் சென்ற போது காவல்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
ஆடவர் பிடிபடும் போது அவரிடம் சில போக்கிமான் அட்டைகள் இருந்ததாகவும் அவை திருடப்பட்டிருக்கலாம் என்றும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சந்தேக நபரிடம் கிட்டத்தட்ட 500 போக்கிமான் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஃபாங்கிற்கு செப்டம்பர் மாதம் தண்டனை விதிக்கப்படலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு திருட்டுக் குற்றத்திற்கும் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.