புக்கிட் பாத்தோக் பகுதியில் காவல்துறை அதிகாரியை தாக்கிய சந்தேகத்தில் 29 வயது ஆடவர் ஒருவர் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
ஆடவர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
திங்கட்கிழமை பிற்பகல் 1:20 மணியளவில் புக்கிட் பாத்தோக் வெஸ்ட்டில் உள்ள புளோக் 468B அருகே மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தேடிவரும் நபரைக் கண்டுபிடிக்க காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப் பேர்வழி காவல்துறை அதிகாரியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த காணொளிகளும் சமூக ஊடகங்களில் உள்ளன.
காணொளியில் சந்தேக நபரை அதிகாரிகள் மடக்கிப்பிடிப்பதும் பொதுமக்களில் ஒருவர் சந்தேக நபரைக் கைது செய்ய உதவியதும் பதிவாகியிருந்தது.