தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாழ்க்கை, தனிமை, மனநலன்

3 mins read
3a7a3f1f-423d-40ca-a449-350cb93e4af5
பலர் சூழ்ந்திருக்கும் போதிலும் ஒருவரைத் தனிமை வாட்டக்கூடும். வயது, பாலினம், சமூகப் பொருளியல் நிலவரம் எப்படி இருந்தாலும் யாரையும் அது பாதிக்கும். - படம்: பிசினஸ் டைம்ஸ் கோப்புப்படம்
multi-img1 of 2

இப்போதைய உலகம் முன்பு எப்போதையும்விட அதிகமாக இணைக்கப்பட்டு, பிணைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. இத்தகைய ஓர் உலகில்கூட இன்னமும் தனிமை வெளியே தெரியாத மவுனமான பிரச்சினையாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.

வாழ்க்கையின் அனைத்து தரப்பு மக்களையும் அது பாதிக்கிறது. ஃபேஸ்டைம், ஸூம், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் போன்ற மின்னிலக்கத் தகவல் தொடர்புத்தளங்கள் மூலம் தொழில்நுட்பம் மக்களை அணுக்கமாக்கி இருக்கிறது.

அதேவேளையில், மனிதர்களுக்கு இடையிலான தொடர்புகளின் ஆழமும் தரமும் பாதிக்கப்பட்டுவிட்டன.

தனிமை ஒரு தொற்றுநோயாக வியாபிக்கிறது. அதனால் மகிழ்ச்சிக்கும் உடல்நலனுக்கும் மிரட்டல் ஏற்படுகிறது.

ஆனாலும் தனிமை என்பது எளிதாக ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாக இருப்பதில்லை.

தனிமையாக ஒதுங்கி இருப்பது ஓர் அவமானம் என்ற ஓர் உணர்வு இருக்கிறது. தாங்கள் நண்பர்கள் இல்லாதவர்கள், விரும்பப்படாதவர்கள், பிரபலம் இல்லாதவர்கள் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்க யாருமே விரும்புவதில்லை.

அமெரிக்காவில் பெரியவர்களில் சுமார் பாதிப்பேர் தனிமையை அனுபவிப்பதாக அமெரிக்காவின் ஜெனரல் விவேக மூர்த்தி கூறுகிறார். இது கொவிட்-19க்கு முந்தைய நிலவரம் என்கிறார்.

பலரும் தனிமையால் அவதிப்படுகிறார்கள். பலரும் தனிமையால் போராடுகிறார்கள். ஆனால், அதைப் பற்றி அவர்கள் வெளியில்பேசுவதில்லை.

இதை மருத்துவ ரீதியில் சொல்ல வேண்டுமானால், நாள் ஒன்றுக்கு 15 சிகரெட்டுகளைப் புகைத்தால் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படுமோ அந்த அளவுக்குத் தனிமை தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதனால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. ஆயுள் குறைகிறது. மனநலமும் கெடுகிறது.

தனிமை என்பது தனித்து இருப்பது மட்டுமல்ல. சமூக ரீதியில் தொடர்பு இல்லாமலும் ஒதுங்கி இருப்பதாகவும் பொருள்பொதிந்த மானிட உறவுகள் இல்லாமல் இருப்பதாலும் ஏற்படுகின்ற ஓர் உணர்வின் அனுபவமாகவே தனிமை உணரப்படுகிறது.

மக்கள் சூழ்ந்திருக்கும் சூழலிலும் தனிமை உணர்வு உருவாகுகிறது. அது வயது, பாலினம், சமூகப் பொருளியல் பின்னணி எப்படி இருந்தாலும் யாரையும் பாதித்துவிட முடியும்.

அன்பர்களைப் பிரிந்து தொலைதூரத்தில் வசிப்பது, வாழ்க்கையில் இடம்பெறக்கூடிய மாற்றங்கள், சமூக அச்ச உணர்வு அல்லது பொதுவான நாட்டங்கள் இல்லாத ஒரு நிலை ஆகியவை தனிமை உணர்வுகளை உருவாக்குவதற்கான காரணங்களில் உள்ளடங்கும்.

பிரிட்டனைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘தனிமைக்கு முடிவுகட்டும் இயக்கம்’ என்ற ஓர் இயக்கம், தனிமை உணர்வைச் சமாளிக்கும் முயற்சிகளைத் தொடங்க வழி கூறி இருக்கிறது.

பக்கத்து வீட்டுக்காரரிடம் வணக்கம் சொல்லுங்கள். நீங்கள் வசிக்கும் பகுதிகளைச் சேர்ந்த பொழுதுபோக்குக் குழுக்களில் சேருங்கள். ஒத்த மனச் சிந்தனை உடையவருடன் கலந்துறவாடுங்கள் என்று அந்த இயக்கம் பரிந்துரைக்கிறது.

ஆடவர்களைப் பொறுத்தவரை தொண்டூழியம் என்பது மனம் கவரும் ஒன்றாக இருக்கலாம்.

நேருக்கு நேர் கலந்துரையாடல், மின்னணுச் சாதனங்களுக்கு ஓரம் கட்டும் நடவடிக்கைகள் போன்றவை இதர ஆலோசனைகளில் உள்ளடங்கும்.

என்னைப் பொறுத்தவரை தனிமையைத் துடைத்தொழிப்பதில் நான் ஒன்றும் வல்லுநர் அல்ல. இருந்தாலும் தனிமையைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் நான் சிறுசிறு முயற்சிகளை எடுத்து இருக்கிறேன்.

முதலில் தனிமை உணர்வை ஏற்றுக்கொண்டு அது பொதுவான ஒன்றுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இதில் அவமானம் எதுவும் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

பழைய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முயலுங்கள். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்களுக்குப் பிடித்தமான பயிலரங்குகள், வகுப்புகள், பொழுதுபோக்குக் குழுக்களில் சேருங்கள்.

இதைப் பொறுத்தவரை தொண்டூழியமும் உங்களுக்குக் கைக்கொடுக்கும்.

தொழில்நுட்பத்தை அறிவுபூர்வமான முறையில் தழுவிக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்ற, மனநிறைவு அளிக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். பொழுதுபோக்குகளில் நேரத்தை முதலீடு செய்யுங்கள். காலக்கிரம முறைப்படி உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். புதுப்புது நாட்டங்களைக் கண்டுபிடியுங்கள்.

அப்படியும் தனிமை உணர்வு உங்களிடம் இருந்து வந்தால் நிபுணத்துவ உதவியை நாடுங்கள்.

இப்படி உதவி நாடுவதில் அவமானம் என்று எதுவும் கிடையாது என்பதை உணருங்கள்.

மனிதருக்கு மனிதர் இடைப்பட்ட உறவுகள் நல்வாழ்வுக்கு அவசியமானவை. இவற்றைப் பேணி கட்டிக்காப்பதன் வழி மகிழ்ச்சி நிறைந்த, முழுமையான மனநிறைவு அளிக்கக்கூடிய வாழ்வை நாம் சாதிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்