மகளுக்காக போக்குவரத்துக் குற்றத்தை ஏற்றுக்கொண்ட தந்தைக்கு நான்கு மாதச் சிறை

மகளுக்காக போக்குவரத்துக் குற்றத்தை ஏற்றுக்கொண்ட தந்தைக்கு நான்கு மாதச் சிறை

2 mins read
33736c40-211e-4a3f-8975-296e4f4d2b38
டேவிட் ஓங் எனும் இந்த 57 வயது தந்தை தம் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். தமது கிராப் வாடகை காரை தம் மகளான 27 வயது ஆட்ரே ஓங் ஹுய் லிங்கை காப்புறுதி இல்லாமல் ஓட்ட திரு ஓங் அனுமதித்தார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாகனமோட்டும் உரிமம் இல்லாமல் காரோட்டி விபத்தை விளைவித்த மகளுக்காக அக்குற்றத்தைத் தான் செய்ததாகப் பொய்யுரைத்த தந்தைக்கு வெள்ளிக்கிழமை நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

டேவிட் ஓங் எனும் அந்த 57 வயது தந்தை தம் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். தமது கிராப் வாடகை காரை தம் மகளான 27 வயது ஆட்ரே ஓங் ஹுய் லிங்கை காப்புறுதி இல்லாமல் ஓட்ட திரு ஓங் அனுமதித்தார்.

சிறைத்தண்டனையுடன் திரு ஓங்குக்கு $500 அபராதமும் அனைத்து வகை வாகனங்களை ஓராண்டுக்கு ஓட்டவும் வைத்திருக்கவும் தடையும் கூடுதல் தண்டனைகளாக விதிக்கப்பட்டன. வாகனமோட்டும் உரிமம் இல்லாத மகளை காரோட்ட அனுமதித்த குற்றமும் தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டது.

சம்பவம் நடந்தபோது கிராப் வாடகை கார் ஓட்டுநராகப் பணியாற்றிய திரு ஓங், தந்தைப் பாசத்தால் குற்றம் புரிந்துவிட்டார் என அவரது தற்காப்பு வழக்கறிஞர் எஸ்.எஸ்.தில்லன் நீதிமன்றத்தில் கூறினார்.

தந்தை என்ற முறையில் மகள் புரிந்த குற்றத்தைத் தான் ஏற்றுக்கொண்டதாகவும் திரு தில்லன் கூறிய வாதத்தை மாவட்ட நீதிபதி கென்னத் சின் நிராகரித்தார்.

“மகளைக் காப்பாற்ற நினைத்த டேவிட் ஓங்கின் வழி ஒரு தவறான அணுகுமுறை. தவறிழைத்த மகளை அதன் விளைவுகளைச் சந்திக்க அறிவுறுத்துவதற்குப் பதிலாக, அவர் செய்த குற்றத்தைத் தானே செய்ததாக ஒப்புக்கொண்டது சட்டத்துக்கு எதிரான செயல்,” என்று நீதிபதி தெரிவித்தார்.

முன்னதாக ஜூன் மாதத்தில் ஆட்ரே ஓங் புரிந்த குற்றத்துக்காக அவருக்கு 17 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கவனக்குறைவாக வாகனமோட்டி பிறருக்குக் கடுமையான காயத்தை விளைவித்ததற்காக ஆட்ரே விடுதலையான தேதியிலிருந்து ஈராண்டுகளுக்கு வாகனமோட்ட தடையும் விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
விபத்து