சிங்கப்பூரில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில் போட்டி இருந்தால் அந்தத் தேதியில் மக்கள் வாக்கு அளிப்பார்கள்.
தேர்தலில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் களத்தில் இருந்தால் வேட்புமனு நாளன்றே அந்த வேட்பாளர் போட்டியின்றி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இது, வேட்புமனுத்தாக்கல் நாளான ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்றே தெரிந்துவிடும்.
அதிபர் தேர்தலில் போட்டியிடத் தேவையான தகுதிச் சான்றிதழைப் பெறுவதற்குத் தாக்கலாகி இருக்கும் எல்லா மனுக்களையும் ஆராய்ந்து தனது முடிவை வேட்மனுத் தாக்கல் நாளுக்கு முதல்நாளே அவர்களிடம் அதிபர் தேர்தல் குழு அறிவித்துவிட வேண்டும்.
ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் களத்தில் இருந்தால் அவர் வேட்புமனுத் தாக்கல் நாளன்றே அதிபராக அறிவிக்கப்படுவார்.
தேர்தல் துறை இந்த விவரங்களை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. பிரதமர் லீ சியன் லூங் தேர்தலை நடத்துமாறு உத்தரவிட்டு இருக்கிறார் என்றும் அது அறிவித்தது.
வாக்களிப்பு நாள் பொது விடுமுறை நாளாக இருக்கும்.
எண் 9, கிங் ஜார்ஜஸ் அவென்யூவில் உள்ள மக்கள் கழக அரங்கில் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்.
தொடர்புடைய செய்திகள்
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் மெங் டூய் தேர்தல் அதிகாரியாக இருப்பார்.
இதனிடையே, பிரதமர் லீ வெள்ளிக்கிழமை ஃபேஸ்புக்கில் அதிபர் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
“தேர்தலில் போட்டியிட ஒரு சிலர் ஏற்கெனவே முன்வந்து இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் விருப்பத்தை தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.
“அவை பற்றி ஊடகத்தில் அதிக தகவல்கள் இடம்பெற்று இருக்கின்றன.
“தேர்தல் பிரசாரக் காலத்தில் வேட்பாளர்கள் தங்களைப் பற்றி தெரிவிக்கும் மேலும் பல விவரங்களை நாம் கேட்போம் என்பது உறுதி,” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
“ஒவ்வொரு வேட்பாளரும் தெரிவிக்கும் கருத்துகளை மிகக் கவனமாகக் கேட்டு அவற்றை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். நம்முடைய அதிபர் சிங்கப்பூரர்கள் அனைவரையும் பிரதிநிதிப்பவர். அவர் நமது ஒற்றுமையின், விருப்பங்களின் அடையாளம்.
“சிங்கப்பூரர்கள் அனைவரும் விவேகமாக முடிவு செய்து, அதிபர் பதவிக்குப் பொருத்தமான, தலைசிறந்த வேட்பாளருக்கு வாக்கு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், 66, தொழிலதிபர் ஜார்ஜ் கோ, 63, ஜிஐசி நிதியத்தின் முன்னாள் முதலீட்டுத் துறை தலைவர் இங் கோக் சோங், 75, என்டியுசி இன்கம் முன்னாள் தலைவர் டான் கின் லியன், 75, ஆகியோர் இதுவரை அறிவித்து இருக்கிறார்கள்.
அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தகுதிச் சான்றிதழ், சமூகச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும். அவை இரண்டுக்கும் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவற்றோடு, அரசியல் நன்கொடைச் சான்றிதழையும் வேட்பாளர்கள் பெற வேண்டும். இதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 18ஆம் தேதி கடைசி நாள்.
வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் $40,500 வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.
இதனிடையே, கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டுக் கழகமும் வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டன.
செப்டம்பர் 1ஆம் தேதி ஆசிரியர் தின பள்ளி விடுமுறை நாள் என்று ஏற்கெனவே அட்டவணையிடப்பட்டது. அந்த நாள் செப்டம்பர் 11ஆம் தேதிக்கு மாற்றப்படும் என்று அறிக்கை தெரிவித்தது.
செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் தேர்வுகள் செப்டம்பர் 12, செப்டம்பர் 20ஆம் தேதிக்கு மாற்றப்படும்.
அதிபர் தேர்தல் அறிவிப்பு:
ஆகஸ்ட் 11: தேர்தல் அறிவிப்பு வெளியான நாள்
ஆகஸ்ட் 17: தகுதிச் சான்றிதழ், சமூகச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய இறுதி நாள்
ஆகஸ்ட் 18: அரசியல் நன்கொடை சான்றிதழைப் பெறுவதற்கு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்
ஆகஸ்ட் 21: வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் அறிவிப்பு நாள்
ஆகஸ்ட் 22: வேட்புமனுத் தாக்கல் நாள்
ஆகஸ்ட் 22-ஆகஸ்ட் 30: தேர்தல் பிரசார நாள்கள்
ஆகஸ்ட் 31: பிரசார ஓய்வு நாள்
செப்டம்பர் 1: வாக்களிப்பு நாள், பொது விடுமுறை