அனைத்துலகக் காவல்துறைக்கு உதவிய சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு நிறுவனம்

அனைத்துலகக் காவல்துறைக்கு உதவிய சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு நிறுவனம்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Aug 2023 - 7:47 pm

2 mins read

இணையக் குற்றத்தை முறியடிக்க சிங்கப்பூரைச் சேர்ந்த ஓர் இணையப் பாதுகாப்பு நிறுவனம் உள்ளிட்டவை அனைத்துலகக் காவல்துறைக்கும் (இன்டர்போல்) பல்வேறு அனைத்துலக சட்ட ஒழுங்கு அமைப்புகளுக்கும் உதவியுள்ளன.

மோசடியில் ஈடுபடுவதற்கென பல்வேறு போலி இணையத்தளங்கள் உருவாகக் காரணமான மென்பொருளை விற்கும் தளம் முறியடிக்கப்பட்டது.

கட்டணம் செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட விவரங்களை ஏமாற்றிப் பெற அந்த மென்பொருள் வகைசெய்தது. அமசோன், ஆப்பிள், பேபால் போன்ற முன்னணி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து தனிப்பட்ட தகவல்களைப் பெற சம்பந்தப்பட்ட மென்பொருள் உதவக்கூடும்.

போலி இணையப் பக்கங்களைக்கொண்டு அத்தகைய மோசடி மேற்கொள்ளப்படும்.

இதன் தொடர்பில் மூன்று ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் புரிந்த குற்றம் நிரூபிக்கப்பட்டது.

மோசடியில் ஈடுபட வகைசெய்யும் மென்பொருளை விற்ற ‘16shop’ எனும் தளத்துக்குப் பின்னால் எஞ்சிய இருவரும் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

‘குரூப்-ஐபி’ எனும் சிங்கப்பூரைச் சேர்ந்த இணையப் பாதுகாப்பு நிறுவனம் இந்த முறியடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. 16shop தளத்தில் விற்கப்பட்ட மென்பொருளைக் கொண்டு 15,000க்கும் அதிகமான போலி இணையப் பக்கங்கள் உருவாக்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இதனால், 43 நாடுகளைச் சேர்ந்த 70,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டதாக அனைத்துலகக் காவல்துறை குறிப்பிட்டது.

சம்பந்தப்பட் மென்பொருளை உருவாக்கியவர் 23 வயது ரிஸ்வாண்ட நூர் சப்பூத்ரா. மென்பொருளை உருவாக்கியபோது அவருக்கு வயது 17.

2021 நவம்பர் மாதம் இந்தோனீசியாவில் கைதான அவருக்கு மறுஆண்டே இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனையும் 500 மில்லியன் ரூப்பியா (44,300 வெள்ளி) அபராதமும் விதிக்கப்பட்டன.

2023 ஏப்ரலில் அவர் நன்னடத்தை அடிப்படையில் தற்காலிகமாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இரண்டாவது ஆடவர் 2022 ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் கைதானார். மூன்றாவது நபர் 2023 ஜூலை ஒன்பதாம் தேதியன்று இந்தோனீசியாவில் கைதுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்உலகம்மோசடிகுற்றம்இந்தோனீசியாஜப்பான்