தேசிய தினமான ஆகஸ்ட் 9ஆம் தேதி செந்தோசா தீவில் உள்ள ஒரு ஹோட்டலில் போதைப்பொருள் உட்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 49 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 21 வயதுக்கும் 46 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். கைதானவர்களில் 35 பேர் சிங்கப்பூரர்கள்.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய திடீர் சோதனையின்போது ‘எக்ஸ்டசி’, ‘கெட்டமின்’ எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளும் அதை உட்கொள்ள பயன்படுத்தப்படும் சாதனங்களும் கைப்பற்றப்பட்டன.
தகவல் அறிந்து காவல்துறை நடத்திய சோதனையில், பல்வேறு இடங்களில் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படுபவற்றை அதிகாரிகள் கண்டறிந்ததாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அப்பிரிவு அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். ஹோட்டலின் பெயரையோ எஞ்சிய 14 ஆடவர்கள் எந்த நாட்டவர்கள் என்பது குறித்த விவரங்களையோ போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வெளியிடவில்லை.
பிடிபட்ட சந்தேக ஆடவர்களிடம் விசாரணை தொடர்வதாக அப்பிரிவு கூறியது.