சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளியாகி இருப்பதை அடுத்து பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய தேர்தல் பிரசார வழிகாட்டி விதிமுறைகளைத் தேர்தல் துறை சனிக்கிழமை வெளியிட்டது.
அதன்படி, வாக்காளர்களை அதிகம் எட்டக்கூடிய ஒலி, ஒளிபரப்பு சமூக ஊடகம் போன்ற தளங்களைப் பயன்படுத்தும்படி வேட்பாளர்கள் ஊக்கமூட்டப்படுகிறார்கள்.
அதிபர் தேர்தலுக்கு என்று குறிப்பிடத்தக்க பேரணி இடங்கள் கிடையாது என்பதால் வேட்பாளர்கள் நேரடியாகக் கலந்துகொள்ளும் பேரணிகளை நடத்த ஊக்கமூட்டப்பட வில்லை என்று அந்தத் துறை தெரிவித்து உள்ளது.
அதிபர் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒளிவழிகளில் தலா 10 நிமிட நேரம் என இரண்டு முறை பிரசாரம் செய்யலாம்.
அவர்கள் 19 மீடியாகார்ப் தொலைக்காட்சி ஒளிவழிகளை, மீடியாகார்ப், எஸ்பிஎச் ஊடகம், சோ டிராமா! வானொலிகளை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். முதலாவதாக ஆகஸ்ட் 24ஆம் தேதியும் இரண்டாவதாக ஆகஸ்ட் 30ஆம் தேதியும் அவர்கள் தொலைக்காட்சியில் பிரசாரம் செய்யலாம்.
தமிழ், ஆங்கிலம், மலாய், சீனம் ஆகிய அதிகாரபூர்வ மொழிகளில் பிரசாரம் செய்யலாம் என்றாலும் எல்லா மொழிப் பிரசாரங்களும் ஒரே தகவலைக் கொண்டிருக்க வேண்டும்.
வேட்பாளர் மட்டும்தான் பிரசாரம் செய்ய முடியும். அவர் சார்பில் வேறு யாரும் செய்ய இயலாது.
முதல் பிரசாரத்தை அகர வரிசைப்படி வேட்பாளர்கள் செய்வார்கள். இரண்டாவது முறையின்போது இது அப்படியே மாறி இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
எஸ்பிஎச் ஊடகம் ஆகஸ்ட் 27ஆம் தேதி காணொளி ஒன்றை வெளியிடும். இளம் சிங்கப்பூரர்களின் கேள்விகளுக்கு வேட்பாளர்கள் பதில் அளிப்பார்கள். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இணையத்தளத்திலும் சமூக ஊடகத் தளங்களிலும் இதைக் காணலாம்.
மீடியாகார்ப் நடத்தும் கருத்தரங்கு சேனல் நியூஸ் ஏஷியாவில் ஆகஸ்ட் 28ல் ஒளிபரப்பாகும்.
நேரடி தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நடத்த விரும்பும் வேட்பாளர்கள் அதற்கான இடத்திற்குச் சொந்தக்காரரிடம் இருந்து முதலில் அனுமதியைப் பெற்று பிறகு காவல்துறை அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இத்தகைய பேரணியை நடத்த விரும்பினால் விளையாட்டு அரங்குகளில் அல்லது உள்ளரங்குகளில் அதை நடத்தும்படி வேட்பாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
ஆகஸ்ட் 22ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்த பிறகுதான் காவல்துறை அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும். இதை அவர்கள் கூட்டம் நடப்பதற்கு இரண்டு நாள் முன்னதாகச் செய்ய வேண்டும்.
சமூக ஊடகத் தளங்களிலும் இணையத்தளங்களிலும் மின்னஞ்சல் வழியாகவும் வேட்பாளர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு பிரசாரத்தை மேற்கொள்ளலாம்.
கட்சி சார்ந்த அரசியல் திரைப்படங்களைத் தயாரிக்கவோ, காட்சிப்படுத்தவோ, விநியோகிக்கவோ வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் அனுமதி கிடையாது.
தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் வாக்களிப்பு நாள் வரை தேர்தல் கருத்து கணிப்பு, வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்து கணிப்பை வெளியிட முடியாது.
அந்நிய தலையீடு தொடர்பில் வேட்பாளர்கள் விழிப்புடன் இருந்து வரவேண்டும்.
வெளிநாட்டு தலையீட்டுச் செயல்களுக்குத் தாங்கள் இலக்காக்கப்படுவதாக வேட்பாளர் யாருக்காவது சந்தேகம் ஏற்பட்டால் அது பற்றி அவர் காவல்துறையிடம் புகார் செய்ய வேண்டும். தேர்தல் துறையிடத்திலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
தேர்தலிலும் பிரசாரத்திலும் சிங்கப்பூர் குடிமக்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். வேட்பாளர் ஒருவருக்காக தேர்தல் காரியங்களைச் செய்ய விரும்பும் எந்தவொரு சிங்கப்பூரரும் வேட்பாளர் அல்லது அவருடைய முகவர் கையெழுத்திட்ட எழுத்துப் பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
16 வயதுக்குட்பட்டவர்கள், குற்றவியல் விதி (தற்காலிக அம்சங்கள்) சட்டத்திற்கு ஆளானவர்கள், வெளிநாட்டினர், வெளிநாட்டு அமைப்புகள் எந்தவொரு தேர்தல் செயலிலும் ஈடுபடக் கூடாது.
வேட்பாளர்கள் விரோத அடிப்படையில் பாதகமான முறையில் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது.
வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், அவர்களின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகள் யாவரும் தேர்தல் பிரசாரத்தைப் பொறுப்புள்ள முறையில், கண்ணியமாக நடத்த வேண்டும்.
பொய்த் தகவல்களை, இன, சமய பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை அல்லது சமூகப் பிணைப்பிற்குப் பாதகமான தகவல்களை அவர்கள் யாரும் வெளியிடக் கூடாது.
வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளுக்காக $812,822.10 வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் துறை தெரிவித்து இருக்கிறது.
இந்தத் தொகை 2017ல் நடந்த அதிபர் தேர்தலின்போது $754,982.40 ஆக இருந்தது.
21 வயதும் அதற்கு அதிக வயதும் உள்ள சிங்கப்பூர் குடிமக்கள், சிங்கப்பூரில் முற்றிலுமாக அல்லது பிரதானமாக தொழிலை நடத்தக்கூடிய சிங்கப்பூர் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள நிறுவனங்கள் மட்டும்தான் அரசியல் நன்கொடைகளை வழங்க முடியும்.
வாசகக் கொடிகள், பதாகைகள், கொடிகள், சுவரொட்டிகள் போன்ற வழிவழியான தேர்தல் பிரசாரப் பொருள்கள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பிரசாரக் காலத்தின்போது வேட்பாளர்கள் வாகனங்களைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு மூலம் பிரசாரம் செய்யலாம். இதற்கு காவல்துறை அனுமதி பெற வேண்டும்.
வாகனங்களில் இருந்து வேட்பாளர்கள் உரையாற்ற முடியாது. வாகனங்களில் நின்றுகொண்டு யாருமே பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அரசியல் கட்சிகள் தங்களுடைய கட்சிப் பெயரை அல்லது சின்னத்தைப் பயன்படுத்தி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்றும் தேர்தல் துறை தெரிவித்து இருக்கிறது.

