அண்மையில் ஆண்ட்ராய்ட் கைப்பேசி பயனாளர்களைப் பாதித்த இணைய வங்கி மோசடிகள் தொடர்பில் 10 சந்தேக நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
அவர்களில் 16 வயது இளையரும் அடங்குவார். திருட்டு மென்பொருள் வழியாக இவர்கள் மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது.
மென்பொருள் ஒன்றின் வழியாக வங்கிக் கணக்குகளை ஊடுருவி அந்தக் கணக்குகளில் அதிகாரபூர்வமற்ற பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11 வரை தீவு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
அரசாங்கத்தின் வர்த்தக விவகாரத் துறையும் காவல்துறையின் உளவுப் பிரிவும் இணைந்து நடத்திய சோதனையில் பத்துப் பேரும் பிடிபட்டனர்.
இவர்கள் தவிர மேலும் ஏழு பேர் விசாரணையில் உதவி வருகின்றனர். அவர்கள் 17 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இது தொடர்பாக காவல்துறை சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஆண்ட்ராய்ட் கைப்பேசியில் உள்ள வங்கிச் செயலியில் ஊடுருவி மோசடி நிகழ்த்தப்பட்ட சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வந்துள்ளதை காவல்துறை கவனித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்கள், ஓடிபி எனப்படும் ரகசிய எண் மற்றும் சிங்பாஸ் விவரங்கள் ஆகிய விவரங்களை வங்கி வாடிக்கையாளர்கள் யாரிடமும் தெரிவிக்காத நிலையில் மோசடிகள் அரங்கேற்றப்பட்டதாகவும் அது கூறியது.
அதேநேரம், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களை உண்மை என நம்பி அது தொடர்பான விவரங்களை வங்கி வாடிக்கையாளர்கள் நாடியபோது அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட யோசனைகளின்படி மென்பொருளை பதிவிறக்கம் செய்ததன் மூலம் மோசடிக்கு அவர்கள் பலியாகி இருப்பதாகக் காவல்துறை கூறியது.
முன் பின் தெரியாத, மூன்றாம் தரப்பு இணையத்தளங்களில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போதும் கியூஆர் குறியீட்டை வருடும்போதும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுமாறு பொதுமக்களை காவல்துறை கேட்டுக்கொண்டு உள்ளது.