சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களிக்கும் வாய்ப்பை சிங்கப்பூரர்கள் எதிர்பார்ப்பதாக அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள டான் கின் லியன் கூறியுள்ளார்.
‘என்டியுசி இன்கம்’ அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாகியான திரு டான், போட்டியிடுவதாக அறிவிப்பை வெளியிட்ட பின்னர் முதல்முறையாக சனிக்கிழமை ‘அவர் தெம்பனிஸ் ஹப்’பில் செய்தியாளர்களிடம் பேசினார்.
தாம் போட்டியிடுவதால் வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் வாக்குகள் சிதறுவதை தாம் விரும்பவில்லை என்று திரு டான் சொன்னார்.
இந்த முறை அதிபர் தேர்தலில் ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு அதிபர் தேர்தல் குழு அனுமதி அளிக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழில்முனைவர் ஜார்ஜ் கோ ஏற்கெனவே அதிபர் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தை வெளியிட்டு இருந்தார்.
திரு கோவுக்கும் தமக்கும் என இரு சுயேச்சை வேட்பாளருக்குத் தகுதி வழங்கப்பட்டால் யாராவது ஒருவர் விட்டுக்கொடுப்பது பற்றி திரு கோவிடம் தாம் பேசவேண்டி இருக்கும் என்று திரு டான் தெரிவித்தார்.
இவ்வாறு செய்வதால் சுயேச்சை வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் வாக்குகள் சிதறாமல் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

