மோசடிக்காரர்கள் வங்கிக் கணக்குகளைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அனுமதித்த அல்லது அவர்களுக்காக வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவிய 19,000க்கும் மேற்பட்டோரிடம் 2020க்கும் கடந்த ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் காவல்துறை விசாரணை நடத்தியது.
வங்கிக் கணக்கு, சிங்பாஸ் விவரங்களை விற்று குற்றவியல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அத்தகையோர் நோக்கம் கொண்டிருந்ததை நிரூபிப்பது சிரமமாக இருந்தது.
ஆனால், இதைக் கையாளுவதன் தொடர்பில் கடந்த மே மாதம் கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டது. வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பில் மோசடிக்காரர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களை ஒடுக்கும் நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
மோசடிக்காரர்களுக்கு உதவ கூடுதலான இளையர்கள் சேர்க்கப்படுவது குறித்து கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சட்டத்தில் இந்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
2020க்கும் கடந்த ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இடம்பெற்ற மோசடிகளில், மோசடிக்காரர்களுக்கு உதவியாக இருந்ததன் தொடர்பில் விசாரிக்கப்பட்ட 113 பேரில் 45 விழுக்காட்டினர் 25 வயது மற்றும் அதற்குக்கீழ் இருந்ததைக் காவல்துறை நடத்திய ஆய்வு காட்டியது.
இவ்வாண்டின் முற்பாதியில் விசாரிக்கப்பட்ட அத்தகையோரில் 15 வயது நபரும் ஒருவர்.
இத்தகைய குற்றங்கள் தொடர்பில் சட்ட ஆலோசனை பெறுவதற்காக கடந்த ஆண்டில் குறைந்தது 10 இளையர்கள் தம்மை நாடியதாக ‘ஐஆர்பி லா’ சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த திரு அஸ்ரி இம்ரான் டான் தெரிவித்தார். ஒப்புநோக்க, 2020லும் 2021லும் ஆண்டுக்கு சுமார் மூவர் தம்மை அணுகியதாக அவர் கூறினார்.
மோசடிக்காரர்களுக்கு துணைபுரிந்ததன் தொடர்பில் கடந்த ஆண்டில் 30 வயதுக்குக்கீழ் உடைய 15 பேர் வரை தமது நிறுவனம் சந்தித்ததாக ‘இன்விக்டஸ் லா’ சட்ட நிறுவனத்தைத் தோற்றுவித்த திரு ஜோசஃபஸ் டான் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“இது கவலைதரும் ஒரு போக்கு. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது மோசடி தொடர்பிலான கூடுதலான வழக்குகளை நாங்கள் பார்க்கிறோம்,” என்றார் திரு டான்.
எளிதில் பணம் ஈட்டலாம் என உறுதியளிப்பதுடன் இதில் ஈடுபடுவதால் பிரச்சினை எதுவும் ஏற்படாது எனக் கூறி மோசடிக் கும்பல்கள் இளையர்களை ஈர்ப்பதாக ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
வங்கி, சிங்பாஸ் கணக்குகளைப் பெற இளையர்களை ஈர்ப்பதில் மோசடிக் கும்பல்கள் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிங்பாஸ் கணக்கு விவரங்களைப் பெற ரொக்கம் வழங்குவதற்காக மட்டும் டெலிகிராமில் 14 உரையாடல் குழுக்கள் இயங்குவதை இணையப் பாதுகாப்பு நிறுவனமான குரூப்-ஐபி கண்டறிந்தது.