அமைச்சர் மாலிக்கி ரியாவ் தீவுகளுக்கு மூன்று நாள் பயணம்

1 mins read
f26d09ad-858b-48c4-816e-16c9cfb35314
அமைச்சர் மாலிக்கி ஓஸ்மான், பாத்தாம் அரசு பலதுறைத் தொழிற்கல்லூரியில் மாணவர்களின் திட்டப்பணிகளைப் பார்வையிட்டார். - படம்: வெளியுறவு அமைச்சு

பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஓஸ்மான், மூன்று நாள் பயணமாக இந்தோனீசியாவின் ரியாவ் தீவுகளுக்குச் சென்றார்.

முதல் நாளில், பாத்தாம் தீவில் சிங்கப்பூர் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த தேசிய தின வரவேற்பு நிகழ்வில் டாக்டர் மாலிக்கி கலந்துகொண்டார்.

அதே தினம், பாத்தாம் மேயர் முகம்மது ருடியையும் அவரின் மனைவியும் ரியாவ் தீவுகளின் துணை ஆளுநரான திருவாட்டி மர்லின் ஆகஸ்டினாவையும் டாக்டர் மாலிக்கி சந்தித்தார்.

“சிங்கப்பூருக்கும் பாத்தாம் தீவுக்கும் இடையேயான வலுவான உறவுகளை நாங்கள் மறுஉறுதிப்படுத்தினோம். இருதரப்பிலும் ஈடுபாட்டை மேலும் தீவிரப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் நாங்கள் கலந்தாலோசித்தோம்,” என்று டாக்டர் மாலிக்கி கூறினார்.

கல்வி இரண்டாம் அமைச்சருமான டாக்டர் மாலிக்கி, பாத்தாம் அரசு பலதுறைத் தொழிற்கல்லூரிக்குச் சென்றார். அங்கு மாணவர்களின் திட்டப்பணிகளைக் காட்டும் கண்காட்சிகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர் வேறொரு நிகழ்ச்சியில் இளம் தொழிலதிபர்களை அவர் சந்தித்தார். தொழில் நிலவரம் குறித்த கண்ணோட்டங்களை வழங்கிய வர்த்தகத் தலைவர்கள், இருதரப்பும் பலனடையும் வண்ணம் பாத்தாம் தீவுடன் சிங்கப்பூர் எவ்வாறு மேலும் ஒத்துழைக்கலாம் என்பது குறித்தும் பேசினர்.

அடுத்த நாள், ரியாவ் தீவுகளின் ஆளுநர் அன்சார் அகமதையும் அவரின் மனைவியையும் டாக்டர் மாலிக்கி சந்தித்தார். பின்னர் பென்யங்காட் தீவில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் அவர் பங்கேற்றார்.

டாக்டர் மாலிக்கி சனிக்கிழமை சிங்கப்பூர் திரும்பவிருந்தார்.

குறிப்புச் சொற்கள்