அதிபர் தேர்தலை பொதுத் தேர்தலைப் போல நடத்தக் கூடாது என்று முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்.
அப்படி நடத்தினால் மக்கள் தேர்ந்தெடுக்கும் அதிபர் முறை பலவீனமடைந்துவிடும் என்று சனிக்கிழமை அவர் கூறினார்.
அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருக்கும் நான்கு பேரில் ஒருவரான திரு தர்மன், டேங் ரோட்டில் சனிக்கிழமை நடந்த கலந்துரையாடலில் தன் துணைவியார் திருவாட்டி ஜேன் ஒடோகியுடன் கலந்துகொண்டார். அதில் சுமார் 120 பேர் பங்கெடுத்தனர்.
சிங்கப்பூரர்கள் அனைவரும் வாக்களித்து அதிபரைத் தேர்ந்தெடுக்கும் முறை அரசியல் சார்பற்றதாக இருக்கும்பட்சத்தில் நீண்டகாலப்போக்கில் மட்டுமே நல்லபடி பலனளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
அதிபர் தேர்தல் வேட்பாளர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பாரேயானால், அந்தத் தேர்தல் பொதுத் தேர்தலைப் போன்றதாகவே ஆகிவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.
இது நிகழ நாம் இடம்கொடுத்துவிடக் கூடாது என்று திரு தர்மன் வலியுறுத்தினார்.
தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் என்பவர் கொள்கைகளுக்கும் அரசாங்கத்திற்கும் அப்பாற்பட்டு சுதந்திரமாகச் செயல்படக்கூடியவர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதிபர் தேர்தல் வேட்பாளர் ஒவ்வொருவரையும் மக்கள் அரசியல் கண்வழியாக நோக்கக்கூடாது. அவர் சமூகத்திற்கு ஆற்றி இருக்கும் தொண்டுகளைக் கவனிக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
வேட்பாளர்கள் கடைப்பிடிக்கும் நன்னெறிகளை, மக்கள் மீது கொண்டுள்ள பரிவை, அனைத்துலக ரீதியில் அவர்கள் எப்படி கருதப்படுகிறார்கள் என்பதை எல்லாம் மக்கள் கவனிக்க வேண்டும் என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.

