நூலகரின் ஊதியம் 2022ல் 50%க்கும் மேல் கூடியது

நூலகரின் ஊதியம் 2022ல் 50%க்கும் மேல் கூடியது

3 mins read
1f20d84a-8801-440d-a0b4-077fffdebc63
சிங்கப்பூரில் நூலகர்களின் சராசரி மொத்த மாத ஊதியம், 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் 50%க்கும் அதிகமாகக் கூடியது. அவர்கள் சராசரியாக $6,269 மாதச் சம்பளம் பெற்றனர். -  படம்: தேசிய நூலக வாரியம்

சிங்கப்பூரில் நூலகர்களின் சராசரி மொத்த மாத ஊதியம், 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் 50%க்கும் அதிகமாகக் கூடியது. அவர்கள் சராசரியாக $6,269 மாதச் சம்பளம் பெற்றனர்.

அதேபோல், புத்தாக்க விளம்பர நிபுணர்களின் சம்பளம் அந்த அளவுக்கு அதிகரித்தது.

மெய்நிகர் தோற்ற மேம்பாட்டாளர்கள், வாடிக்கையாளர் கணக்குச் சேவை நிர்வாகிகள் ஆகியோர் மட்டுமே நூலகர்களைவிட அதிக சராசரி மொத்த சம்பள உயர்வைப் பெற்றதாக மனிதவள அமைச்சின் வருடாந்திர வேலைநியமன ஊதிய ஆய்வு தெரிவிக்கிறது.

ஆய்வு முடிவுகள் ஜூலை நடுப்பகுதியில் வெளியிடப்பட்டன.

ஆய்வு சென்ற ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை நடத்தப்பட்டது.

அதில் 4,350 தனியார் துறை முதலாளிகளிடம் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டன. அவர்கள், 2022 ஜூனில் சுமார் 222,300 சிங்கப்பூர்வாசிகளை ஊழியர்களாக வேலையில் வைத்து இருந்தார்கள். மத்திய சேமநிதிச் சந்தாவையும் செலுத்திவந்தார்கள்.

இந்த விவரங்களையும் இதர பல்வேறு தரப்புகளின் புள்ளிவிவரங்களையும் பயன்படுத்தி எஸ்டி சம்பள வழிகாட்டி 2023ஐ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் உருவாக்கியது. அது திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.

ஊழியரின் மொத்த சம்பளத்தில் அடிப்படைச் சம்பளம், மிகைநேரச் சம்பளம், தரகுத் தொகை, அலவன்சுகள், இதர வழக்கமான ரொக்கப் பட்டுவாடாக்கள் உள்ளடங்கும்.

ஊழியர் செலுத்த வேண்டிய சேமிநிதித் தொகையும் வருமான வரித் தொகையும் அதில் அடங்கும்.

முதலாளி செலுத்தும் சேமநதிச் சந்தா, போனஸ், பங்கு விருப்ப உரிமைகள், இதர ஒரு நேரத் தொகை, கருணைத்தொகை ஆகியவை அதில் இடம்பெறாது.

ஆக அதிக சம்பள உயர்வைப் பெற்ற முதல் 10 வேலைகளில், வேதிப்பொறியியல் நிபுணர் (பெட்ரோலிய, இயற்கை எரிவாயு நீங்கலாக); தகவல்தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் நிபுணர்; உணவு, உணவு சார்பான உற்பத்திப் பொருள்களுக்கான இயந்திரங்களை இயக்குவோர்; சிறப்புக் கல்வி ஆசிரியர்கள்; நிறுவன நிதித்துறை திட்ட விற்பனை பட்டத்தொழிலர்கள்; தகவல்தொழில்நுட்ப ஆதரவு நிபுணர்கள் ஆகியோர் இடம்பெற்று இருக்கிறார்கள்.

தனியார் மருத்துவர்கள், மின்னணுத் துறை உதவிப் பொறியாளர்கள், சிகை அலங்கார நிபுணர்கள் போன்ற வேலைகளுக்கான சராசரி மொத்த ஊதியம்தான் 30%க்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது.

பணிமனை சட்ட ஆலோசகர் வேலைதான் அதிக வருவாய் ஈட்டித்தந்த தொழிலாகும்.

அந்த வேலையைப் பார்த்தவர்கள் 2022ல் ஆக அதிகமாக மாதம் $13,918 அளவுக்குச் சராசரி மொத்த சம்பளம் பெற்றனர். தலைமைத் தகவல், தலைமைத் தொழில்நுட்பம், தலைமைப் பாதுகாவல் அதிகாரிகளுக்குச் சராசரி மொத்த மாதச் சம்பளமாக $13,544 கிடைத்தது.

பண்டகம், கப்பல் தரகர்கள் பெற்ற மாத மொத்த சராசரி ஊதியம் $13,217. உத்திபூர்வ திட்ட நிர்வாகி, இடர் தவிர்ப்புத்துறை நிர்வாகி, கடற்துறை சூப்பரின்டென்டண்ட், பல்வேறு நிதித்துறை வேலைகள் ஆகியவை அதிக ஊதியம் தந்த 10 வேலைகளில் அடங்கும்.

ஆக அதிக சராசரி மொத்த சம்பளம் கிடைத்த முதல் 10 வேலைகளைப் பார்த்தவர்கள் அனைவருமே மாதம் $11,000 சம்பாதித்தனர்.

இதனிடையே, சென்ற ஆண்டில் சில வேலைகளைப் பொறுத்தவரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் அதிக சம்பள வேறுபாடு இருந்தது.

அதிக வேறுபாடு இருந்த முதல் 10 வேலைகளில் ஏழு வேலைகள் நிதித்துறையைச் சேர்ந்தவை என்று மனிதவள அமைச்சின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் கணக்கிட்டுப் பார்க்கையில் சென்ற ஆண்டில் ஊதியம் 6.5% கூடியது.

குறிப்புச் சொற்கள்