அதிபரின் பொறுப்புகளில் ஒன்றான சிங்கப்பூரின் சேமிப்பைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனுபவம் தனக்கு இல்லை என்ற கருத்தை அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள திரு டான் கின் லியன் மறுத்துள்ளார்.
தாம் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த முப்பதாண்டு காலத்தில் என்டியுசி இன்கம்மின் சொத்துகள் வளர்ந்ததைச் சுட்டினார் திரு டான்.
1977ல் $28 மில்லியனாக இருந்த என்டியுசி இன்கம்மின் சொத்துக்கள் 2007ல் $17 பில்லியன் ஆனது என்றார் அவர்.
“நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது, நீண்ட கால லாபம் ஈட்டக்கூடிய பாதுகாப்பான முதலீடுகளில் முதலீடு செய்வது குறித்து என்னிடம் சில கொள்கைகள் உள்ளன,” என்றார் அவர்.
செங்காங்கில் உள்ள கோப்பித்தியாம் உணவு அங்காடிக்கு திங்கட்கிழமை சென்ற 75 வயது திரு டான், அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள மற்றொரு வேட்பாளரான திரு இங் கோக் சோங் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்தார்.
ஜிஐசி என்ற அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டுத் துறை தலைமை அதிகாரியான திரு இங், 2007க்கும் 2015க்கும் இடையில் நிதியமைச்சராக பணியாற்றிய முன்னாள் மூத்த அமைச்சர் திரு தர்மன் சண்முகரத்தினம் போலவே நாட்டின் சேமிப்பை தாம் புரிந்துகொண்டதாக ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
66 வயதான திரு தர்மன், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளும் மக்கள் செயல் கட்சியில் இருந்தும், அனைத்து அரசாங்கப் பதவிகளில் இருந்தும் விலகுவதாகவும் ஜூன் மாதம் அறிவித்தார்.
திரு டானும் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தொழிலதிபர் திரு ஜார்ஜ் கோவும் நாட்டின் சேமிப்பைப் பாதுகாப்பதில் உள்ள நுணுக்கங்களை தாங்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்பதை இன்னும் நிரூபிக்கவில்லை என்று திரு இங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“எனது அனுபவம் அநேகமாக ஜிஐசியைப் போலவே சிறப்பாகவும் இருக்கலாம், ஒருவேளை அதைவிட சிறப்பாகவும் இருக்கலாம்,” என்று அதற்கு திரு டான் பதிலுரைத்தார்.
அத்துடன், பிரசாரம் தொடர்பாக தேர்தல் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் தெளிவாக இல்லை என்று அவர் கூறினார். வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாளுக்கு முன்னதாக, சுற்றுலாக்கள் போன்ற நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பதும் இதில் அடங்கும் என்றார்.
அதிபர் தேர்தலுக்கான குறுகிய கால அவகாசம் குறித்தும் திரு டான் மீண்டும் கருத்துரைத்தார். வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 22 அன்றும், போட்டியிருந்தால் வாக்களிப்பு நாள் செப்டம்பர் 1 முதல் தேதியும் இடம்பெறுவதை அவர் குறிப்பிட்டார்.
பிரசார ஓய்வு நாள் தவிர்த்து, வேட்புமனுத் தாக்கல் நாளுக்கும் வாக்களிப்பு நாளுக்கும் இடையே 10 நாட்கள் மட்டுமே இருக்கும் என்றார் அவர். வாக்காளர்களுக்கு தனது செய்தியை தெரிவிக்க இது போதுமானது இல்லை என்று திரு டான் கூறினார்.

