சிங்கப்பூரின் அடுத்த அதிபராக தேர்வுசெய்யப்படுபவர், ஒரு நிறுவனத்தின் வெளிப்புற கணக்குத் தணிக்கையாளரைப்போல செயல்பட வேண்டும் என்று அதிபராக விரும்பும் இங் கோக் சோங் கூறியுள்ளார்.
நிறுவன நிர்வாகத்துக்கு அல்லாமல் புற பங்குதாரர்களுக்குப் பொறுப்பேற்பவராக அதிபர் இருக்க வேண்டும் என்றார் அவர்.
அரசியல் தொடர்பு எதுவும் இல்லாத ஒருவரே அதிபர் பதவிக்கு ஆகச் சிறந்தவர் என்ற கருத்தைப் பதிவுசெய்ய திரு இங் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
திங்கட்கிழமை சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபைக்கு சென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரும்பாலான நிறுவனங்களிடம் உட்புற, வெளிப்புற கணக்குத் தணிக்கையாளர்கள் இருப்பதாகச் சொன்னார்.
உட்புற கணக்குத் தணிக்கையாளர் பணியைச் சிறப்பாக செய்தாலும் அது போதுமானதாக இல்லாத அபாயம் எப்போதும் நிலவுவதாக அவர் கூறினார்.
ஆளும் மக்கள் செயல் கட்சியுடன் தொடர்பில்லாதவராக, நிதியிருப்பைக் கையாளுவதற்கான தொழில்நுட்ப, நிதித்திறன் உடையவராக, அதிபராவதற்கான தகுதிக்கூறுகள் தமக்கு இருப்பதாக திரு இங் கூறினார்.
அனைத்துலக மேடையில் சிங்கப்பூரைப் பிரதிநிதிப்பதிலும் தலைமை அரசதந்திரியாக அதிபரின் பங்கை ஆற்றுவதிலும் தமக்கு நம்பிக்கை இருப்பதாக அவர் சொன்னார்.

