அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கைகளை வகுப்பது அதிகம் கடினமாகி வருகிறது. சில அம்சங்களை விட்டுக்கொடுத்து, சமநிலையைக் காண வேண்டும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் திங்கட்கிழமை கூறினார்.
இன்றைய சிங்கப்பூர் சூழலில், வகுக்கப்படும் ஒவ்வொரு புதிய கொள்கைக்கும் முடிவுக்கும் கருத்துசார்ந்து பெரும் விவாதங்கள் நடைபெறுகின்றன என்றார் அவர்.
ஒரு கொள்கையை உருவாக்கும்போது, நீண்டகாலத்தில் சிங்கப்பூருக்கு எது சரியாக இருக்கும், எது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும், “அதை விளக்கவும், இது சரியானது என்று மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்யவும் வேண்டும் என்றும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) நான்காம் தலைமுறைக் குழுவின் தலைவரான திரு வோங் கூறினார்.
மறைந்த திரு லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ‘விதியைப் புதுப்பித்தல்’ (ரீஇன்வென்டிங் டெஸ்டினி) எனும் உரையாடலில் திரு வோங் பேசினார்.
அண்மைய சர்ச்சைகளால் மசெக எதிர்கொள்ளும் சவால்கள், அதன் அடுத்தகட்ட திட்டங்கள், மக்களின் மனநிலை, தனது நிலைப்பாடு, சீனா, அமெரிக்க அரசியல் - பொருளியல் போக்குகள் போன்ற பலவற்றை குறித்த கேள்விகளுக்கும் திரு வோங் பதிலளித்தார்.
சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் புத்தாக்க நகரங்களுக்கான லீ குவான் இயூ நிலையம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளி, கொள்கை ஆய்வுக் கழகம் ஆகியன உரையாடலை ஏற்பாடு செய்தன.
சிஎன்என் வாராந்திர நிகழ்ச்சியான ‘ஃபரீத் ஜக்காரியா ஜிபிஎஸ்’ தொகுப்பாளரும் தி வாஷிங்டன் போஸ்ட்டின் கட்டுரையாளருமான டாக்டர் ஃபரீத் ஜக்காரியா உரையாடலை வழிநடத்தினார்.
மற்ற நாடுகளைப்போல சிங்கப்பூரும் ஜனரஞ்சகமான கொள்கைகளைக் கைக்கொள்ள வேண்டியது பற்றி கவலைப்படுகிறீர்களா என்று டாக்டர் ஃபரீத் எழுப்பிய கேள்விக்கு திரு வோங் பதிலளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
நிதி அமைச்சராகவும் இருக்கும் திரு வோங், இன்றைய உலகில் தகவல் பரவலாகக் கிடைப்பதால் அவ்வாறு செய்வதற்கான அழுத்தம் எப்போதும் இருப்பதாகக் கூறினார்.
மசெக கிட்டத்தட்ட மொத்த ஆதிக்கநிலையை மேற்கொள்ளவில்லை என்று கூறியவர், அரசியல் போட்டா போட்டி அதிகரித்து வருகிறது. இது எதிர்பார்த்ததுதான் என்றும் சொன்னார்.
“என்னைப் பொறுத்தவரை, குறிப்பாக அண்மைய சம்பவங்கள், கட்சி அனுபவித்த பின்னடைவுகளுக்குப் பிறகு, அந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளவும், மீண்டெழுந்து, வலுவாக வளரவும் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். சிங்கப்பூரர்களின் நம்பிக்கையை வெல்ல முடியும்,” என்று கூறினார் திரு வோங்.
மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் இடையே தற்போது உயர் நம்பிக்கை நிலவுகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
“பெருகிவரக் கூடிய சமூக மூலதனத்தையும், நம்பிக்கையையும் வலுப்படுத்தி, சிங்கப்பூர் அடுத்த தேர்தலைச் சந்திக்கும்போது மக்களின் நம்பிக்கையையும் மக்களின் வாக்கையும் கட்சி தொடர்ந்து பெற உறுதிசெய்வதே எனது உடனடி முன்னுரிமை.
“அரசாங்கத்தில், எல்லாம் சரியாக நடக்கும்போது, சிறப்பாக இருக்கும்போது, ‘நம்பர் ஒன், தங்கத் தரம்’ என்று மக்கள் பாராட்டும்போது தலைக்கனம் வரக்கூடாது.
“அதே நேரத்தில், சவால்கள், பின்னடைவுகள், தவறுகள் நிகழும்போது, அரசாங்கம் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும்.
“தவறுகள் தோல்விகளில்தான் கற்றுக்கொள்வதற்கும் சிறந்து விளங்குவதற்கும் அதிக உந்துதலைப் பெறுகிறோம். அதுதான் நான் எடுக்கும் அணுகுமுறை,” என்று துணைப் பிரதமர் கூறினார்.
உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் நம்பிக்கையை வளர்ப்பது, நிலைநாட்டுவது குறித்து பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திரு வோங், சிங்கப்பூர் செயல்படும் விதம் - அதன் செயல்களில் நிலையான, கொள்கையையும் நம்பகத்தன்மையையும் மக்கள் அறிவார்கள் என்று கூறினார்.
எந்தப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் வெற்றியில் பயனடைவதை அரசாங்கம் உறுதிசெய்யும்போது நம்பிக்கை கட்டமைக்கப்படுகிறது, மேலும் சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தாங்களும் அங்கம் வகிப்பதாக மக்கள் உணருகிறார்கள்.
சிங்கப்பூர் நாடு தழுவிய ‘முன்னேறும் சிங்கப்பூர்’ கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரர்களுக்கான இந்த உறுதிமொழியை வலுப்படுத்துவதற்கான கொள்கைகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் தங்குமிட வசதிகள், மன நலனில் கவனம் செலுத்துதல், பொழுதுபோக்கிற்கான இடங்களை வழங்குதல் என சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கைச் சூழலையும் அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் சிங்கப்பூரர்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். “உங்கள் வீட்டிற்கு அருகே ஒரு தங்குவிடுதியைக் கட்டுவதாக இருந்தால், அதை திறந்த மனத்துடன் வரவேற்க வேண்டுகிறேன்,” என்று திரு வோங் கேட்டுக்கொண்டார்.