பிரசார ஓய்வு நாளில் தேர்தல் விளம்பரங்களை வெளியிட அனுமதியில்லை

2 mins read
29e270b7-63fd-4b5a-9877-f0065a315bcf
வேட்பாளர் அல்லது தேர்தல் முகவர், கட்டணத்துடன் கூடிய அனைத்து விளம்பரங்களையும் தேர்தல் அதிகாரியிடம் தெரியப்படுத்துவதோடு ஏற்கெனவே உள்ள விதிமுறைகளுக்கு அவர்கள் உட்பட்டு நடக்க வேண்டும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்கள் தங்களது சொந்த விருப்பத்தின்பேரில் கட்டணமின்றி இணையத் தேர்தல் விளம்பரங்களை வெளியிட அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், கட்டணத்துடன் கூடிய இணையத் தேர்தல் விளம்பரங்களை வேட்பாளரும் அவருடைய தேர்தல் முகவர்களும் மட்டுமே வெளியிடமுடியும்.

வேட்பாளர்கள் அல்லது தேர்தல் முகவர்கள் அல்லாதவர்கள், வேட்புமனுத் தாக்கல் தினத்தைத் தொடர்ந்து வேட்பாளர் அல்லது தேர்தல் முகவரிடமிருந்து எழுத்துபூர்வ அனுமதியைப் பெற்றால் மட்டுமே கட்டணத்துடன் கூடிய இணையத் தேர்தல் விளம்பரங்களை வெளியிடலாம்.

தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் தேர்தல் துறையும் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தன.

வேட்பாளர் அல்லது தேர்தல் முகவர், கட்டணத்துடன் கூடிய அனைத்து விளம்பரங்களையும் தேர்தல் அதிகாரியிடம் தெரியப்படுத்துவதோடு ஏற்கெனவே உள்ள விதிமுறைகளுக்கு அவர்கள் உட்பட்டு நடக்க வேண்டும்.

தேர்தல் விளம்பரங்களை வெளியிடுவதற்குப் பொறுப்பேற்பவர்கள், அவற்றுக்கு ஒப்புதல் அளித்தவர்கள், விளம்பரங்களை வெளியிட உத்தரவிட்டவர்கள், அவற்றுக்குக் கட்டணம் செலுத்தியவர்கள் ஆகியோரின் முழுப் பெயர் விவரங்களைக் குறிப்பிடுவது விதிமுறைகளில் அடங்கும்.

வேட்பாளர்கள் அல்லது தேர்தல் முகவர்கள் அல்லாத சிங்கப்பூரர்கள் சொந்த விருப்பத்தின்பேரில் கட்டணமின்றி இணையத் தேர்தல் விளம்பரங்களை வெளியிட்டால், மேற்கண்ட விதிமுறைகளை அவர்கள் பின்பற்றத் தேவையில்லை.

கட்டணத்துடன் கூடிய அல்லது கட்டணம் அல்லாத தேர்தல் விளம்பரங்களைப் பிரசார ஓய்வு நாளிலும் வாக்களிப்பு நாளிலும் வெளியிட அனுமதிக் கிடையாது என்பது சிங்கப்பூரர்களுக்கு நினைவூட்டப்படுகிறது.

பிரசார ஓய்வு நாளுக்கு முன்னர் சட்டபூர்வமாக வெளியிடப்பட்ட இணைய தேர்தல் விளம்பரங்கள் அகற்றப்பட வேண்டியதில்லை. ஆனால், அவை மாற்றப்படாமல் இருந்திருக்க வேண்டும்.

அத்தகைய விளம்பரங்களை மீண்டும் வெளியிடுவது புதியனவற்றை வெளியிடுவதாகக் கருதப்படுகிறது. பிரசார ஓய்வு நாளிலும் வாக்களிப்பு நாளிலும் அவ்வாறு செய்வதற்கு அனுமதியில்லை.

குறிப்புச் சொற்கள்