அதிபர் தேர்தலில் யாரேனும் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு தகுதி வழங்கப்பட்டால் அதுவே சிறப்பானதாக இருக்கும் என இத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள டான் கின் லியன் தெரிவித்துள்ளார்.
என்டியுசி இன்கம் அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாகியான அவர், செவ்வாய்க்கிழமை ஜூரோங் வெஸ்ட் 505 சந்தை மற்றும் உணவு நிலையத்தில் குடியிருப்பாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திரு டான், 75, “சுயேச்சையாகக் களமிறங்கும் ஜார்ஜ் கோவும் நானும் தேர்தலில் போட்டியிடத் தகுதிபெற்றவர்களாக அதிபர் தேர்தல் குழு அறிவித்தால் நாங்கள் இருவரும் கலந்துபேசுவோம்.
“யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்து போட்டியில் இருந்து விலகுவது பற்றி ஆலோசிப்போம்.
“சுயேச்சையாக ஒருவர் மட்டும் போட்டியிடும்போது இருவருக்குக் கிடைக்கும் வாக்குகள் ஒருவருக்குக் கிடைக்கும்.
“சுயேச்சை வேட்பாளர் அதிபராக வேண்டும் என விரும்பி அளிக்கப்படும் வாக்குகள் சிதறாமல் இருக்கும்,” என்றார்.
ஆயினும், அதிபர் தேர்தலில் களமிறங்கப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த ஜார்ஜ் கோ, 63, என்னும் வர்த்தகர், கலந்துபேசும் ஏற்பாடு எதனையும் திரு டானிடம் செய்துகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

