சொந்த தந்தையால் கொல்லப்பட்ட 11 வயது இரட்டையரின் பாட்டி, தம் பேரப்பிள்ளைகள் பற்றி இன்னும் கனவு காண்பதாகக் கூறியுள்ளார்.
தம் மகன் சேவியர் யாப் ஜுன் ஹொவ்னுக்கு ஆதரவளிக்க செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்திற்கு வந்திருந்த அந்த 80 வயது மூதாட்டி, தம் பேரப்பிள்ளைகளைக் காண மனம் ஏங்குவதாகக் குறிப்பிட்டார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கண்ணீர் மல்கப் பேசிய அந்த மூதாட்டி, “எனது கனவுகளில், என் பேரப்பிள்ளைகளுடன் நான் இன்னும் விளையாடுகிறேன். அவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டை நாங்கள் ஆடுகிறோம்,” என்றார்.
தனியாக வசிக்கும் அந்த மூதாட்டி, தம்மைப் பார்க்க வரும்போதெல்லாம் தம் மகன் அந்த இரட்டையரை உடன் அழைத்து வருவார் என்று சொன்னார்.
“நாங்கள் ஒன்றாக சேர்ந்து நேரம் செலவிட்டோம். எனது வீட்டிற்கு வந்த பிறகு அங்கிருந்து புறப்பட அவர்களுக்கு மனம் வராது. வீட்டிற்குத் திரும்பும் நேரம் வந்துவிட்டால் தங்கள் காலணிகளை அவர்கள் ஒளித்து வைத்துவிடுவர்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மூதாட்டி சொன்னார்.
யாப்பின் மூத்த சகோதரியுடன் நீதிமன்றத்துக்கு வந்திருந்த அந்த மூதாட்டி, அந்த இரட்டையர் அதிகம் பேசாவிட்டாலும் தம்முடன் இருப்பது அவர்களுக்குப் பிடித்தமான ஒன்று என்று கூறினார்.
“அவர்களுக்கு நீந்தவும் என்னுடன் விளையாடவும் பிடிக்கும். அவர்கள் என்னுடைய பொக்கிஷமான பேரப்பிள்ளைகள். அவர்கள் மீது நான் அதிக பாசம் வைத்திருந்தேன்,” என்றார் அவர்.
இந்நிலையில், யாப் எழுதிய கடிதம் ஒன்றை அவருடைய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாசித்தனர். உயிரை விடுவதற்கான எண்ணம் தமக்கு முன்னதாக இருந்தபோதிலும், தம் தாயாருக்காக உயிர்வாழ இப்போது தாம் விரும்புவதாக யாப் குறிப்பிட்டிருந்தார்.


