தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வருங்கால சந்ததியினருக்காக அரசாங்க நிதியை சேமிப்பது பற்றிய புரிதல் அவசியம்: தர்மன்

2 mins read
8a2456d4-cccd-4791-b1b5-2888904a7e24
திரு தர்மன் சண்முகரத்னம் ஆகஸ்ட் 11ஆம் தேதி டாசெக் ஜூரோங் யூத் கிளப்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிபர் தேர்தலில் திரு தர்மன் சண்முகரத்னம் போட்டியிடுவார் என்று ஜூன் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கேற்ற வகையில் மூத்த அமைச்சர் பொறுப்பில் இருந்து அவர் விலகினார்.

மக்கள் செயல் கட்சியின் மிகவும் பிரபலமான அரசியல்வாதி என்பதை பல காலமாக வெளியான தேர்தல் முடிவுகளும் கருத்துக்கணிப்புகளும் உணர்த்தி உள்ளன.

குறிப்பாக, ஆகக் கடைசியாக நடைபெற்ற 2020 பொதுத் தேர்தலில் திரு தர்மன் வழிநடத்திய ஜூரோங் குழுத்தொகுதி 74.62 விழுக்காடு வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சிக்கு ஆக அதிகமான வாக்குகள் கிடைத்தது அந்தத் தொகுதியில்தான்.

திரு தர்மன் அதிபர் தேர்தல் களத்தில் நிறுத்தப்படுவது இதர அதிபர் தேர்தல் வேட்பாளர்களை வீழ்த்தக்கூடிய சிறந்த முடிவாக இருக்கும் என்று சிலர் கூறுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் தெரிவித்துள்ளார். அவர் திரு தர்மனை கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) பேட்டி கண்டார்.

நெருக்கடி காலத்தில் சிங்கப்பூர் தனது சேமிப்பு நிதியைப் பயன்படுத்துவது பற்றி இருமுறை மேற்கொண்ட திடமான முடிவுகளில் திரு தர்மனின் தலையீடு இருந்தது.

கடந்த 2008ஆம் ஆண்டு உலகளாவிய பொருளியல் மந்தம் நிலவிய வேளையில் நிதி அமைச்சராக இருந்த திரு தர்மன், சேமிப்பு நிதியில் இருந்து $4.9 பில்லியனைப் பயன்படுத்த யோசனை தெரிவித்தார்.

வேலை உதவித் திட்டத்திற்கும் வர்த்தகங்களுக்குக் கடன்கொடுக்க வங்கிகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கும் செலவிட சேமிப்பு நிதியைப் பயன்படுத்தும் யோசனை அது.

அடுத்து, கொவிட்-19 கொள்ளை நோய் பரவிய காலத்தில் பொருளியல் கொள்கைகள் குறித்து பிரதமர் லீ சியன் லூங்கிற்கு ஆலோசனை தெரிவிக்கும் மூத்த அமைச்சர் பொறுப்பில் திரு தர்மன் இருந்தார்.

அப்போது வேலைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க சேமிப்பு நிதியில் இருந்து $69 பில்லியனைப் பயன்படுத்த அரசாங்கம் உத்தேசித்தது. இறுதியில், $39.7 பில்லியன் பயன்படுத்தப்பட்டது.

அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டால் இத்தகைய அனுபவங்கள் எவ்வாறு கைகொடுக்கும் என்று திரு தர்மனிடம் செய்தியாளர் வினவினார்.

அதற்குப் பதிலளித்த திரு தர்மன், “சேமிப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பது பற்றி பரிசீலிப்பது என்பது சரியா-தவறா என்கிற விஷயமல்ல. பிரச்சினை என்னவென்று நன்றாகத் தெரியும்போது அரசாங்கத்துடன் கலந்துபேச வேண்டியதுதான்.

“பொருளியல் கொள்கையில் நீங்கள் எந்த அளவுக்கு தெளிவானவர் என்கிற பின்னணி அப்போது உங்களுக்குக் கைகொடுக்கும். சமூகக் கொள்கைகளும் இதற்குப் பொருத்தமாக இருக்கும்.

“வருங்காலத் தலைமுறையினருக்குச் சேவையாற்றும் வகையில் நிதி எவ்வாறு சேமிக்கப்பட வேண்டும் என்பதற்கான புரிதல் வேண்டும். காரணம், நெருக்கடி எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

“தற்போதைய நிலையில் பருவநிலை மாற்றமே அரசாங்கம் எதிர்கொள்ளும் நீண்டகால, ஆகப்பெரிய நெருக்கடி. அதனைச் சமாளிக்க உள்கட்டமைப்பு முதலீடுகள் தேவைப்படும்,” என்றார் திரு தர்மன்.

குறிப்புச் சொற்கள்