எக்சகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகளைத் தவிர்த்துக் கணக்கிடுகையில் ஜூலையில் 1,412 புதிய தனியார் அடுக்குமாடி வீடுகள் விற்பனை ஆனதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.
ஜூன் மாதம் 278 வீடுகள் மட்டுமே விற்பனை ஆன நிலையில் சென்ற மாத விற்பனை கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகம். அதேபோல, கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 68.9 விழுக்காடு அதிகமாக புதிய தனியார் வீடுகள் விற்பனை ஆயின. 2022 ஜூலையில் விற்பனை ஆன வீடுகளின் எண்ணிக்கை 836.
எக்சகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகளையும் சேர்த்துக் கணக்கிட்டால், ஜூலை மாதத்தில் விற்பனை ஆன வீடுகளின் எண்ணிக்கை 1,471 ஆகும். ஜூன் மாதத்தில் இவ்வாறு விற்பனை ஆன வீடுகளின் எண்ணிக்கை 297. அதேபோல 2022 ஜூலையில் அனைத்து வகை தனியார் வீடுகளின் விற்பனை எண்ணிக்கை 848 ஆகும்.
சென்ற மாதம் புதிதாக எக்சகியூட்டிவ் கொண்டோமினிய வீட்டு விற்பனை எதுவும் தொடங்கப்படவில்லை.
ஜூன் விடுமுறைக்குப் பின்னர் நான்கு பெரிய திட்டங்களின் விற்பனை தொடங்கப்பட்டது இந்த திடீர் அதிகரிப்புக்குக் காரணம் என்று பகுப்பாய்வாளர்கள் கூறினர்.
கிராண்ட் டன்மன், லெண்டோர் ஹில்ஸ் ரெசிடென்சஸ், பைன்ட்ரீ ஹில் மற்றும் த மிஸ்ட் தனியார் வீட்டுத் திட்டங்கள் அவை.
இந்த நான்கு திட்டங்களில் விற்பனை ஆன வீடுகளின் எண்ணிக்கை ஜூலை மாத மொத்த விற்பனையில் 82.1 விழுக்காடு என்று ஹட்டன்ஸ் ஏஷியா சொத்து நிறுவனத்தின் மூத்த இயக்குநர் லீ ஸெ டெக் தெரிவித்து உள்ளார்.
மேலும் இந்த நான்கு பெரிய திட்டங்கள்வழி 2,156 தனியார் அடுக்குமாடி வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. 2021 ஜனவரிக்குப் பிறகு இதுவே ஆக அதிகமான புதிய தனியார் வீட்டு விற்பனை. 2,600 வீடுகள் அப்போது விற்பனைக்கு விடப்பட்டதே ஆக அதிகமான எண்ணிக்கையாக இதுவரை இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், சென்ற ஆண்டு ஜூலையில் 408 புதிய வீடுகள் மட்டுமே விற்பனைக்கு விடப்பட்டன.

