ஐந்து வாகனமோட்டிகள் மீது புதன்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்து உள்ளது.
பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியது முதல் காயம் விளைவிக்கும் அளவுக்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது வரை பல குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட உள்ளன.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்படுவோர் வாகனம் ஓட்டுவதில் இருந்து தடை செய்யப்படலாம்.
சாலையைப் பயன்படுத்துவோருக்குக் கடுமையான காயங்கள் ஏற்படும் வகையில், சமிக்ஞை விளக்குடன் கூடிய சாலைக் கடப்புகளை அவர்கள் சரிவரக் கவனிக்கத் தவறியதாக காவல்துறை கூறியது.
அந்த ஐந்து ஆடவர்களும் 31 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் 2022 ஆகஸ்ட் முதல் 2023 ஏப்ரல் வரை நிகழ்ந்தன.
அவர்களில் ஒருவரான 31 வயது ஆடவர் ஏப்ரல் 10ஆம் தேதி வேன் ஓட்டிச் சென்றபோது ஜாலான் புசார் சாலையைக் கடந்துகொண்டு இருந்த இரு முதியவர்கள் மீது அவரது வேன் மோதியது.
சிவப்பு விளக்கு சமிக்ஞையில் வேனை நிறுத்த அவர் தவறியது தெரிய வந்தது. காயம் விளைவிக்கும் அளவுக்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்படும்.