தேசிய சம்பள மன்றம் ஆகஸ்ட் 21ஆம் தேதி கூடுகிறது. அது பொதுமக்களிடம் இருந்து கருத்து களைத் திரட்ட விரும்புகிறது.
ஊழியர்களின் சம்பளம், வேலை நியமன விவகாரங்கள் தொடர்பிலான வழிகாட்டி நெறிமுறைகளை ஆண்டுதோறும் மன்றம் வெளியிடுகிறது.
மன்றத்தில் முதலாளிகள், ஊழியர்கள், அரசாங்கம் ஆகிய முத்தரப்புகளையும் சேர்ந்த பிரமுகர்கள் அங்கம் வகிக்கிறார்கள்.
புதிய நெறிமுறைகள், வரும் நவம்பர் மாதத் தொடக்கத்தில் வெளியிடப்படும். அவை, 2023 டிசம்பர் 1ஆம் தேதி முதல் 2024 நவம்பர் 30ஆம் தேதி வரைப்பட்ட ஓராண்டு காலத்திற்கு உரியவையாக இருக்கும்.
சம்பள நடைமுறைகளும், சம்பள உயர்வுகளுக்கான அளவீடுகளும் அந்த நெறிமுறைகளில் அடங்கி இருக்கும். குறிப்பாக குறைந்த சம்பளம் பெறுகின்ற ஊழியர்களுக்கான இந்த அளவீடுகள் விழுக்காடாகவும் தொகையாகவும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கும்.
சம்பளம் தொடர்பான கருத்துகளையும் வரவிருக்கின்ற வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பான யோசனைகளையும் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், அவற்றை செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் தேசிய சம்பள மன்றத்தின் செயலகத்திடம் தாக்கல் செய்யலாம்.
இதனிடையே, சிங்கப்பூரின் பொருளியல் செயல்திறன், வளர்ச்சி வாய்ப்புகள், தொழிலாளர் சந்தை நிலவரங்கள், பணவீக்கம் ஆகியவற்றை மன்றம் தனது விவாதிப்புகளின்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று மனித வள அமைச்சு தெரிவித்தது.
பொருளியல் வளர்ச்சி மெதுவாக இருக்கிறது. தொழிலாளர் சந்தை தணிகிறது என்பதற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சம்பள உயர்வு பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சென்ற ஆண்டில் 6.5%ஆகக் கூடியது.
ஆனால் பணவீக்கம் சென்ற ஆண்டில் 6.1% ஆக இருந்ததால் சம்பள உயர்வு அடிபட்டுப் போய்விட்டது. மொத்த சம்பளம் 0.4%தான் கூடியது.
இது ஒருபுறம் இருக்க, முதலாளிகள் செலுத்தும் மத்திய சேமநிதிச் சந்தாவைச் சேர்க்காமல் உண்மையான அடிப்படை சம்பளத்தைப் பார்த்தால் அது 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முதலாக சென்ற ஆண்டில் 1% குறைந்துவிட்டது.
இத்தகைய சூழலில் தேசிய சம்பள மன்றம் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த வருமான ஊழியர்களின் சம்பளத்தை 5.5%க்கும் 7.5%க்கும் இடைப்பட்ட அளவில் முதலாளிகள் உயர்த்த வேண்டும் என்று 2023 நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடையும் ஆண்டுக்குரிய பரிந்துரையாக மன்றம் சென்ற ஆண்டில் தெரிவித்தது.
குறைந்த வருமான ஊழியர்களின் சம்பளத்தை அவர்களின் உற்பத்தித்திறனோடு சேர்த்து உயர்த்து வதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் இந்த மன்றம் ஆண்டுதோறும் முன்வைத்து வருகிறது.
வாகன ஓட்டுநர்கள், அலுவலக ஆதரவு ஊழியர்கள் ஆகியோருக்கான 2024 மார்ச் 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும் சம்பளப் பரிந்துரைகளும் வரவிருக்கின்ற மன்றத்தின் நெறிமுறைகளில் உள்ளடங்கும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தேசிய சம்பள மன்றம் சென்ற ஆண்டில் தனது 50வது ஆண்டு நிறைவைக் கண்டது. மன்றத்தில் இப்போது 57 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பத்து பேர் புதியவர்கள்.