சிங்கப்பூரில் திருமண ஜோடிகள், வரும் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் திருமணப் பதிவகத்தில் தங்கள் திருமணத்தை இணையம் வழி பதியலாம்.
இந்தப் பதிவகத்தின் இணையக் களஞ்சியம் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் இந்த விவரத்தைக் கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.
திருமணப் பதிவகத்தின் இணையக் களஞ்சியம் மேம்படுத்தப்பட்டு உள்ளதால் விண்ணப்பம் முதல் சான்றிதழ் வழங்குவது வரை திருமண நடைமுறைகள் அனைத்தும் மின்னிலக்கமயமாகி இருக்கிறது.
திருமண ஜோடிகள், தனிப்பட்ட விவரங்களுடன் சிங்பாஸ் வழி மின்னிலக்க ரீதியில் தங்கள் சட்டபூர்வமான அறிவிப்புகளைத் தாக்கல் செய்யலாம்.
இதற்காக அவர்கள் எண் 7, கேனிங் ரைஸ் முகவரியில் செயல்படும் திருமணப் பதிவகத்திற்கு நேரடியாகப் போக வேண்டிய தேவை இனி இருக்காது.
இந்த மின்னிலக்க ஏற்பாடு, 21 வயது நிரம்பிய, முதன்முதலாக மணம் புரிகின்ற சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளுக்குப் பொருந்தும்.
மற்றவர்கள் பதிவகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டி இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
முஸ்லிம் திருமணங்களைப் பொறுத்த வரை, மணப்பெண்ணின் சட்டபூர்வ காப்பாளர், அவரின் மரபு வழி தந்தையாக இருக்க வேண்டும்.
இத்தம்பதியர் திருமண நிகழ்ச்சிக்கான முன்பதிவை மேம்படுத்தப்பட்ட திருமணப் பதிவக களஞ்சியத்தில் செய்துகொள்ள முடியும்.
திருமண நிகழ்ச்சி முடிந்ததும் மின்னஞ்சல் வழி மின்னிலக்கச் சான்றிதழ் அனுப்பப்படும்.
செப்டம்பர் 25ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு திருமண விண்ணப்பத்தைத் தாக்கல் செய்கின்ற ஜோடிகளுக்குப் பதிவகம் மின்னிலக்கச் சான்றிதழ்களை வழங்கும்.
முஸ்லிம் திருமண பதிவகம் 2024ல் இவ்வாறு செய்யும்.

