சிங்கப்பூர் சேமிப்பு போய்விட்டால் திரும்ப வராது என்று பிரதமர் லீ சியன் லூங் எச்சரித்து இருக்கிறார்.
சிங்கப்பூர், கடந்த 1970களிலும் 1980களில் தொடக்கத்தில் இருந்தது போன்று இப்போது இல்லை. அந்தக் காலகட்டத்தில் வலுவான வளர்ச்சி இருந்தது.
ஆண்டுதோறும் வரவுசெலவுத் திட்டத்தில் உபரி கிடைத்தது. எதிர்காலத்திற்குச் சேர்த்து வைக்க முடிந்தது என்று திரு லீ ஒரு பேட்டியில் விளக்கினார்.
இன்று சிங்கப்பூர் முன்புபோல் ஏழ்மை நிலையில் இல்லை. வருமானம் அதிகரித்து இருக்கிறது.
வாழ்க்கைத்தரம் மேம்பட்டு இருக்கிறது. அதேவேளையில், மக்களின் எதிர்பார்ப்புகளும் தேவைகளும் அதிகரித்து உள்ளன என்பதைத் திரு லீ சுட்டிக்காட்டினார்.
ஆகையால், இன்றைய நிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு அல்லது மூன்று விழுக்காட்டை காலக்கிரம முறைப்படி ஒதுக்கி வைத்து சேமிப்பை உருவாக்கி பலப்படுத்துவது என்பது மிகச் சிரமமானது. பொருளியல் அதனைத் தாங்காது என்று பிரதமர் குறிப்பிட்டு இருக்கிறார்.
சிங்கப்பூர் சேமிப்பைப் பலப்படுத்தி வந்திருப்பது குறித்துத் தான் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார் திரு லீ.
சேமிப்பு கையைவிட்டுப் போனால் போனதுதான். ஒருபோதும் திரும்பாது என்று அவர் எச்சரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் தேசிய ஒளிபரப்பு நிறுவனமான சிஎன்ஏவுக்கு சிங்கப்பூரின் சேமிப்பு பற்றி பிரதமர் ஜூன் 8ஆம் தேதி பேட்டி அளித்தார்.
‘சிங்கப்பூர் சேமிப்பு வெளிப்பாடு’ என்ற தலைப்பிலான அந்தப் பேட்டியின்போது பல கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அந்தப் பேட்டி புதன்கிழமை வெளியிடப்பட்டது.
சேமிப்பு என்பது சிரமமான காலத்தில் ஓர் அனுகூலமாக, வசதியானதாக இருக்கும் என்று திரு லீ தெரிவித்தார்.
சேமிப்பு அரசாங்கத்திற்கு நம்பிக்கையை அளிக்கிறது. அதேவேளையில், நம்முடைய முன்னோடிகள் செய்த தொண்டுகளையும் அது நினைவுபடுத்துகிறது.
வருங்காலத் தலைமுறையினர் தொடர்பில் நமக்குள்ள பொறுப்புகளையும் அது நினைவூட்டுகிறது என்று திரு லீ குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் நாணய ஆணையம், அரசாங்கத்தின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக், ஜிஐசி என்ற நிதியம் ஆகியவை சிங்கப்பூரின் சேமிப்பை நிர்வகிக்கின்றன.
அதில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், மத்திய சேம நிதி, ஜேடிசி கழகம் போன்ற ஆணை பெற்ற அமைப்புகளின் நிதியும் உள்ளடங்கும்.
இவையும் மேற்சொன்ன மூன்று அமைப்புகளும் அரசமைப்புச் சட்டத்தில் ஐந்தாம் அட்டவணையில் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.
சேமிப்பு நிதி போதுமா என்பதன் தொடர்பில் பதிலளித்த திரு லீ, பெரும்பாலான சூழ்நிலைகளைச் சமாளிக்கப் போதுமான சேமிப்பு சிங்கப்பூரிடம் இருக்கிறது. இருந்தாலும்கூட, அந்தச் சேமிப்பு எப்போதுமே இருந்து வரும் என்று நினைப்பது ஆகப் பெரிய தப்பெண்ணமாக இருக்கும் என்றார்.
எதிர்காலம் என்பது கணிக்க முடியாத ஒன்று என்ற திரு லீ, பலவும் தவறாகப் போய்விடக்கூடும் என்று எச்சரித்தார்.
நீண்டகாலக் கண்ணோட்டத்தில் பார்க்கையில், உலகம் அமைதியாக, நிலையாக இருந்து வரும் பட்சத்தில் போதுமான சேமிப்பு இருக்குமா என்றால் இருக்கும் என்பதே தமது நம்பிக்கை என திரு லீ கூறினார்.
எல்லா சூழ்நிலைகளிலும் போதிய அளவுக்குச் சேமிப்பு இருக்குமா என்பது தெரியாது. சிங்கப்பூரர்களின் சார்பில் அரசாங்கம் கவலைப்பட வேண்டி இருக்கின்ற ஓர் அம்சம் இது என்றாரவர்.
சிங்கப்பூரர்கள் சேமிப்பைச் சிரமமான காலத்தில் பயன்படக்கூடிய நிதி என்று பார்க்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார்.
சிரமம் இல்லை என்றால் அதனைத் தொடக்கூடாது. நல்ல காலத்தில் சேமிப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இப்படிச் செய்வதன் மூலம் இப்போதைய தலைமுறையைவிட அடுத்த தலைமுறை மேலும் பாதுகாப்புடன் இருக்க முடியும் என்றார் திரு லீ.
கடந்த 2008ல் உலக நிதி நெருக்கடி ஏற்பட்டபோது சேமிப்பில் இருந்து அரசாங்கம் $4 பில்லியன் முதல் $5 பில்லியன் வரை எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.
கொவிட்-19 தொற்றுக் காலத்தின்போது அரசாங்கத்திற்கு $40 பில்லியனுக்கும் மேற்பட்ட தொகையைச் சேமிப்பில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
உலக நிதி நெருக்கடியின்போது சேமிப்பில் இருந்து எடுத்த பணத்தை அரசாங்கம் மீண்டும் அதில் திருப்பிப் போட்டுவிட்டது.
ஆனால், கொவிட்-19 காலத்தின்போது எடுத்த தொகையைத் திரும்ப சேமிப்பில் செலுத்திவிட முடியும் என்று தான் கருதவில்லை என்றார் திரு லீ.
சிங்கப்பூரின் வரவுசெலவுத் திட்டத்திற்குச் சேமிப்பில் இருந்து தொகை கிடைப்பது முக்கியமான ஒன்று என்பதை சுட்டிய திரு லீ, அது இல்லை என்றால் இதர வழிகளில் இருந்து அரசாங்கம் வருவாயை திரட்ட வேண்டி இருக்கும்.
நிறுவன வருமான வரியை அல்லது தனிநபர் வருமான வரியை இரண்டு மடங்காக்குவது அல்லது ஜிஎஸ்டி வரியை மேலும் கூட்டுவது போன்ற இதர வழிகளை அரசாங்கம் நாட வேண்டி இருக்கும் என்றாரவர்.
சிங்கப்பூரின் சேமிப்பைப் பொறுத்தவரை அந்தச் சேமிப்பைப் பயன்படுத்துவதற்கு இரண்டு சாவிகள் இருக்க வேண்டும் என்று மிக முக்கிய முடிவை அரசாங்கம் செய்தது.
இதனை மனத்தில்கொண்டு அதிபரை மக்களே தேர்ந்தெடுக்கும் திட்டம் பற்றி முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ 1984ல் நடந்த தேசிய தினப் பேரணியில் முதன்முதலாக தெரிவித்தார்.
பிறகு அந்தத் திட்டம் அடுத்த சில ஆண்டுகளில் நடப்புக்கு வந்தது. அந்த ஏற்பாடு, மக்களின் ஒருமித்த கவனத்தைச் சேமிப்பில் திருப்பியது. இதனை வைத்துப் பார்க்கையில், அந்தத் திட்டம் நாட்டின் சேமிப்பை பொறுத்தவரை ஒரு திருப்புமுனை என்று திரு லீ குறிப்பிட்டார்.

