ஆலோசனைக் குழு: முன்னதாகவே குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனை அதிகமாகக் குறைப்பு

2 mins read
3f0db409-4bec-4729-aedf-662ab0bf4425
தண்டனை ஆலோசனைக் குழு என்ற அமைப்பு செவ்வாய்க்கிழமை வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது.  - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர், தான் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக விரைவில் கோடிகாட்டி, பிறகு அவ்வாறே குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவருக்கு 30 விழுக்காடு வரை தண்டனையைக் குறைக்கலாம்.

தண்டனை ஆலோசனைக் குழு என்ற அமைப்பு செவ்வாய்க்கிழமை வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது.

பல அமைப்புகளை உள்ளடக்கிய அந்தக் குழு, தனது பரிந்துரைகளில் ஒன்றாக இவ்வாறு தெரிவித்து உள்ளது.

குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் எந்த கட்டத்தில் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் என்பதன் அடிப்படையில் நீதிபதி தண்டனை குறைக்கக்கூடிய சாத்தியம் பற்றி தெள்ளத்தெளிவாக அந்த நெறிமுறைகள் விளக்குகின்றன.

குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றத்தை முன்னதாகவே ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தண்டனையை அதிகமாகக் குறைக்கும் நடைமுறையைப் பயன்படுத்தலாம் என்று அது தெரிவிக்கிறது.

அரசினர் தரப்பும் தற்காப்பு தரப்பும் நீதிமன்றத்தில் தண்டனை தொடர்பான வாதங்களின்போது இந்த வழிகாட்டி நெறிமுறைகளை 2023 அக்டோபர் 1 முதல் எழுப்பலாம்.

இந்த ஆலோசனைக் குழு வெளியிட்டு இருக்கும் தண்டனை வழிகாட்டி நெறிமுறைகளின் முதலாவது அதிகாரபூர்வ தொகுப்பு இதுவே ஆகும்.

தண்டனை விதிப்பதில் பொதுமக்களின் புரிந்துணர்வை அதிகப்படுத்துவது, ஒளிவுமறைவு இல்லாத நிலையை மேலும் அதிகமாக்குவது, முரணற்ற நிலையை மேலும் சாதிப்பது ஆகியவற்றை இலக்காகக் கொண்டு 2022ல் இந்தக் குழு தோற்றுவிக்கப்பட்டது.

இந்தக் குழுவில் நீதித்துறை, சட்ட அமைச்சு, உள்துறை அமைச்சு, காவல்துறை, தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம், குற்றவியல் வழக்கறிஞர்கள் சபை ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்