நிறுவனக் காசோலை பயன்பாடு குறைவாக இருந்தாலும் முற்றாக நிறுத்துவது சிரமம்

2 mins read
ad3930d4-a3df-4aa4-a8c4-0974256b06e1
படம்: - தமிழ் முரசு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நிறுவனக் காசோலைகளின் பயன்பாடு பெருமளவு குறைந்திருந்தாலும், அதனை முற்றாக நிறுத்துவது அவ்வளவு எளிதல்ல.

குறிப்பிட்ட சில தொழில் நிறுவனங்களுக்கு, காசோலை பயன்பாட்டிலிருந்து மாறுவதற்கு உதவி தேவைப்படும். அதேநேரத்தில், காசோலை அல்லாத மற்ற கட்டணமுறைகளில் பணம் பெற இயலாத வாடிக்கையாளர்களும் இருக்கின்றனர்.

நிறுவனக் காசோலைகள் 2025 கடைசிக்குள் முழுமையாக நிறுத்தப்படுமென்று ஜூலை மாதம் சிங்கப்பூர் நாணய ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து, இவ்விவகாரங்கள் தலையெடுத்துள்ளன.

ஒரு காசோலையைக் கையாளுவதற்காகும் செலவு 2021ல் சராசரியாக 40 காசாக இருந்தது. ஆனால், காசோலைகளின் பயன்பாடு தொடர்ந்து குறைந்துவந்தால், 2025ஆம் ஆண்டுக்குள் இந்தச் செலவு $6 வரை உயரும் என்று முன்னுரைக்கப்படுகிறது.

இதனால், சிங்கப்பூரின் ஏழு முக்கிய வங்கிகள் இவ்வாண்டு நவம்பர் மாதத்திலிருந்தும், மற்ற வங்கிகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்தும், சிங்கப்பூர் வெள்ளியிலான காசோலைகளுக்குக் கட்டணம் விதிக்கத் தொடங்கும்.

சிங்கப்பூரில் சொத்து, சட்டம், காப்புறுதி நிறுவனங்களும், மொத்த விற்பனையாளர்கள், தரகர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இன்னமும் காசோலைகளைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிகிறது.

காசோலைகளின் பயன்பாட்டைக் கைவிடுவது சிறிய, நடுத்தர நிறுவன உரிமையாளர்களுக்குச் சவாலாக இருக்கக்கூடும் என்று மேபேங்க் சிங்கப்பூர் எம்எம்இ பிரிவின் தலைவர் திரு மார்க் லியோங் கூறினார்.

மேலும், குறிப்பிட்ட சிலரிடம் இணைய வங்கிக் கணக்குகளும் இல்லாதிருக்கலாம்.

காசோலைகள் முற்றாக நிறுத்தப்பட்டால், அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்று ஏஐஏ சிங்கப்பூர் நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்