சிங்கப்பூரின் மூன்றாவது தேசிய ‘சூப்பர் கம்பியூட்டர்’ எனப்படும் மகா கணினி சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக சுகாதாரக் குழுமத்தில் (என்யுஎச்எஸ்) அமைந்து இருக்கிறது.
‘பிரிசயின்ஸ்’ என்று அழைக்கப்படும் அந்த மகா கணினி ஜூலை 31ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
தேசியப் பல்கலைக்கழக சுகாதாரக் குழுமமும் சிங்கப்பூர் தேசிய மகா கணினி மையமும் 2021 டிசம்பர் 3ஆம் தேதி ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
அதன்படி பிரிசயின்ஸ் மகா கணினி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மகா கணினி ஏராளமான ஆற்றல்களைக் கொண்டதாகும். மிகவும் சிக்கலான பணிகளையும் அது செவ்வனே நிறைவேற்றிவிடும்.
சிங்கப்பூரின் முதலாவது மகா கணினிக்கு ‘அஸ்பையர் 1’ என்று பெயர். அது 2016ல் அமைக்கப்பட்டது. ‘அஸ்பையர் 2ஏ’ என்ற இரண்டாவது மகா கணினி 2023 ஜூலை முதல் செயல்பட்டு வருகிறது.
இவை இரண்டும் பருவநிலை மாற்றங்கள், பருவநிலைக் கண்காணிப்பு, நகரத் திட்டமிடல், சுகாதாரப் பராமரிப்பு, சாதன ஆய்வுகள் போன்ற பலதரப்பட்ட பரந்த அளவிலான ஆய்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
புதிதாக செயல்படத் தொடங்கி இருக்கும் பிரிசயின்ஸ் மகா கணினி சுகாதாரப் பராமரிப்புக்கும் மருத்துவ ஆய்வுகளுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த மகா கணினி செயல்படத் தொடங்கி இருப்பதை அடுத்து தேசியப் பல்கலைக்கழக சுகாதாரக் குழுமத்தைச் சேர்ந்த சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் அன்றாடப் பணிகள் விரைவில் பெரியளவில் மாற்றம் கண்டுவிடும்.
நோயாளிகளை உரிய சிகிச்சைக்கு அனுப்பி வைப்பதற்கான பரிந்துரைக் கடிதங்களை இனிமேல் மருத்துவர்கள் கைப்பட எழுதவேண்டிய தேவை இருக்காது. அதில் அவர்கள் நேரத்தைச் செலவிட வேண்டிய அவசியமும் இனி இராது.
அதற்குப் பதிலாக, மருத்துவர்கள் பல்கலைக்கழக சுகாதாரக் குழுமத்தின் சாட்ஜிபிடி மூலம் அந்தப் பணியைச் செய்துவிடலாம். இந்த சாட்ஜிபிடி, என்யுஎச்எஸ் ரசல்-ஜிபிடி என்று அழைக்கப்படுகிறது.
மருத்துவமனை ஊழியர்கள் வளங்களை இன்னும் சிறப்பான முறையில் ஒதுக்கி செயல்பட முடியும்.
நோயாளி ஒருவர் மருத்துவமனையில் எவ்வளவு காலம் தங்கி இருப்பார் என்பதை இயந்திர மனிதத் தொழில்நுட்பங்களைக் கொண்டு அவர்கள் கணக்கிட முடியும்.
அந்த மகா கணினிச் செயல்முறையைத் தேசியப் பல்கலைக்கழக சுகாதாரக் குழுமம் முழுவதற்கும் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
நோயாளியின் சிகிச்சை வரலாற்று தகவல்களைப் பகுப்பாய்வு செய்து அதன்மூலம் அவரின் சுகாதாரப் பராமரிப்பு விவரங்களை முன்னுரைப்பதும் வாய்ச் சுகாதாரச் சிகிச்சை செயல்திட்டங்களை மேம்படுத்துவதன் தொடர்பில் விவேகமிக்க கண்காணிப்பு முறைகளையும் அறிவார்ந்த கற்றல்களையும் சாத்தியமாக்குவதும் பிரிசயின்ஸ் மகா கணினியின் உதவியுடன் இடம்பெறக்கூடிய இதர திட்டங்களில் உள்ளடங்கும்.

