இப்போதைய இடத்திலேயே கிராஞ்சி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையைக் கட்டுவது சாத்தியமல்ல

இப்போதைய இடத்திலேயே கிராஞ்சி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையைக் கட்டுவது சாத்தியமல்ல

2 mins read
9f104267-5697-4571-8cc0-59a9aec08b14
கிராஞ்சி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை மேலும் வடக்கே புதிய இடத்தில் 2034ல் புதிதாக உருவாக்கப்படும். - படம்: பொதுப் பயனீட்டுக் கழகம் 

கிராஞ்சி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையை இப்போது அது இருக்கும் இடத்திலேயே புதிதாக மீண்டும் நிர்மாணிக்க முடியாது. கட்டுமானம், செயல்முறை சவால்களே அதற்கான காரணம்.

அந்த ஆலையை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. இப்படி அமைப்பதன் மூலம் இதர மேம்பாடுகளுக்கு நிலம் கிடைக்கும். இந்த மேம்பாடுகளால் புதிய வேலைகள் உருவாகும்.

இவை எல்லாம் சுங்கை காடுட் சுற்றுச்சூழல் மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாகத் திகழும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

கிராஞ்சி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை, கிராஞ்சி எம்ஆர்டி நிலையத்திற்குப் பக்கத்தில் அமைந்து இருக்கிறது.

அந்த ஆலை அந்த நிலையத்திற்கு வடக்கே புதிய இடத்திற்கு மாறும். வரும் 2034ஆம் ஆண்டில் புதிதாக உருவாகும் அந்த ஆலை வடகிழக்கு சிங்கப்பூரின் நியூவாட்டர் தேவையையும் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் தேவையையும் சமாளிக்கும் வகையில் அதிக ஆற்றலைக் கொண்டிருக்கும்.

அந்த இடமாற்றம் வனவிலங்குகள் புழங்கும் ஒரு பாதையின் ஊடே செல்வதால் இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்து இருக்கிறார்கள்.

புதிய ஆலையை இப்போதைய இடத்திலேயே கட்டுவது சாத்தியமா என்பதை ஆராயும்படி இயற்கை ஆர்வலர் குழுமங்கள் பலவும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டு இருக்கின்றன.

இதன் தொடர்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டதற்குப் பதிலளித்த பொதுப் பயனீட்டுக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம், தேசிய பூங்கா வாரியம் ஆகியவை, புதிய கிராஞ்சி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையை இப்போதைய இடத்திலேயே மீண்டும் கட்டினால் கட்டுமான, செயல்முறைச் சவால்களை எதிர்நோக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்தன.

ஆலையை வேறு இடத்தில் கட்டுவதால் இதர மேம்பாடுகளுக்கு நிலப்பரப்பு கிடைக்கும். அந்த நிலத்தில் தொழில்துறை வேலையிடங்களைக் கட்டலாம். எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே அந்த இடங்கள் அமைந்து இருக்கும் என்பதால் பலன்கள் ஏராளமாக இருக்கும் என்று அவை தெரிவித்தன.

ஆலையை இடம் மாற்றி அமைப்பதால் சுங்கை காடுட் சுற்றுச்சூழல் மாவட்டத்தின் வளர்ச்சி மேம்பாடுகளுக்கு ஆதரவும் கிடைக்கும் என்று அவை விளக்கம் அளித்தன.

மத்திய நீர்த்தேக்க வனப்பகுதி, மண்டாய் ஊசியிலைக் காட்டுப் பகுதி, சதுப்பு நிலப்பகுதி ஆகியவற்றுக்கு இடையில் சுற்றுச்சூழல் இணைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்த அமைப்புகள் ஆராயும்.

குறிப்புச் சொற்கள்